போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம்; முதல்வர் பழனிசாமி அழைத்துப் பேச ஆணவத்துடன் மறுக்கிறார்: ஸ்டாலின் விமர்சனம்

ஸ்டாலின்: கோப்புப்படம்
ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச, முதல்வர் பழனிசாமி ஆணவத்துடன் மறுத்து வருவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 27) வெளியிட்ட அறிக்கை:

"ஓய்வூதியதாரர்களுக்குப் பணப் பலன், 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கக் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் பழனிசாமியோ அல்லது போக்குவரத்துத் துறை அமைச்சரோ போராடும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச அடாவடியாக ஆணவத்துடன் மறுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கோரிக்கை விடுத்தும் கூட, முதல்வர் பழனிசாமிக்குப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பேசுவதற்கு நேரமில்லை. இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு நேரும் இன்னல்களை அதிமுக அரசு கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை மனதில் கொண்டு, போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்தவுடன் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் அளிக்க விரும்புகிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in