திருப்பத்தூரில் 80% பேருந்துகள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி

வேலைநிறுத்தம் காரணமாகத் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்துகள்.
வேலைநிறுத்தம் காரணமாகத் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்துகள்.
Updated on
1 min read

அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் 80 சதவீதப் பேருந்துகள் இன்று ஓடவில்லை. இதனால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தன.

எனினும் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும், இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், ஏற்கெனவே விடுமுறை எடுத்தவர்களும் கண்டிப்பாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனால், அரசுப் பேருந்துகள் இன்று இயக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், அரசு எச்சரிக்கையையும் மீறி பெரும்பாலான போக்குவரத்து ஊழியர்கள் இன்று பணிக்கு வரவில்லை. இதனால் பொதுப் போக்குவரத்து பெரிதும் முடங்கியது. நாள்தோறும் பணிக்குச் செல்ல அரசுப் போக்குவரத்தை நம்பியிருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், சேலம் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக டிப்போக்கள் உள்ளன. இங்கிருந்து சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, வேலூர், சென்னை, ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் ஓசூர், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு 174 அரசுப் பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக விழுப்புரம் கோட்டத்தில் 25 பேருந்துகளும், சேலம் கோட்டத்தில் 15 பேருந்துகளும் என 40 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. போதுமான பேருந்து வசதி இல்லாததால் திருப்பத்தூர் பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் இன்று அலைமோதியது.

ஏற்கெனவே கரோன தொற்று காரணமாகப் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதாலும், பிறகு பேருந்து சேவை அனுமதிக்கப்பட்ட பிறகு தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தாலும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு, அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் கைகொடுத்துள்ளது.

இதனால், எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் தனியார் பேருந்துகள் இன்று தொடர்ந்து இயக்கப்பட்டன. இது ஓரளவுக்குப் பொதுமக்களுக்குக் கைகொடுத்தது. அரசுப் பேருந்துகள் இல்லாததால் கிராமப் புறங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இன்று காணப்பட்டது.

ஒரு சில வழித்தடங்களில் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட்டதாகவும் பயணிகள் குற்றம்சாட்டினர். அதேபோல, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ, கால் டாக்ஸிகளில் நிறையப் பேர் பயணம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in