

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (பிப். 25) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 1,635 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 14 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.
மேலும், புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் தொற்று பாதிக்கப்பட்டு இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 677 ஆக உயர்ந்துள்ளது. இதில், மருத்துவமனைகளில் 109 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 87 பேரும் என 196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 13 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 814 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 6 லட்சத்து 24 ஆயிரத்து 285 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 101 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
அதுமட்டுமின்றி, புதுச்சேரியில் 9,108 சுகாதாரப் பணியாளர்கள், 454 முன்களப் பணியாளர்கள் என 9,562 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.