Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

தமிழக மின்வாரியத்தில் புதிதாக 5,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி: ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றலாம் என அரசு உறுதி

தமிழக மின்வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை புதிதாக நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் களப்பணிக்கான கேங்மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த 2019 மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஊழியர்களும், அவர்களுக்கான சங்கங்கள் சார்பிலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

நிரந்தரம் செய்யவில்லை

அதில், ஏற்கெனவே மின்வாரியத்தில் ஏராளமான ஊழியர்கள் பல ஆண்டுகளாக களப்பணி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தற்போது புதிதாக கேங்மேன் என்ற பணியிடத்தை உருவாக்கி அதற்கு விண்ணப்பங்களை வரவேற்பது ஏற்புடையது அல்ல. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும், என கோரியிருந்தனர்.

இடைக்காலத் தடை

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனிநீதிபதி, மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மின்வாரியம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார்.

அரசு வழக்கறிஞர் உறுதி

‘‘மின்வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அனைத்து விதிகளும்முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது. உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட 70 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளது. புதிதாக கேங்மேன்கள் நியமிக்கப்பட்டாலும் ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்துகொண்டு, தமிழக மின் வாரியத்தில் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை புதிதாக நிரப்பிக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x