

புதுச்சேரியில் கடும் மழையை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
தாழ்வான பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றவும், வாய்க்கால் அடைப்புகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அதிகாலை முதல் பொழிந்த கனமழையினால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார்.
ஆளுநர் மாளிகையில் இருந்து கார் மூலம் புறப்பட்ட தமிழிசை உப்பளம் சோனாம்பாளையம் சென்றார். அங்குள்ள பெரிய வாய்க்காலை பார்வையிட்டார். அப்போது வாய்க்கால் நீர் அடைப்பட்டு தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கியிருந்தது. இதை பார்த்த அவர், அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து உடனடியாக வாய்க்கால் அடைப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
இதுபோன்ற வாய்க்கால் அடைப்புகளை அகற்றவும், வழக்கமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தேங்காய்திட்டு, வசந்தம் நகர், ரெயின்போநகர், பகுதிகளையும் பார்வையிட்டார். ஆளுநருடன் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
ஆய்வுக்கு பிறகு அதிகாரிகளுக்கு ஆளுநர் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக ராஜ்நிவாஸ் வெளியிட்ட தகவலில், "கனமழையில் மக்களை பாதுகாக்க உணவு, நீர், தங்குமிடங்களுக்கான சேவை செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும். கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தவேண்டும். ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
அதேபோல் முதல்வர் நாராயணசாமியும் புதுச்சேரியில் பல பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.