கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

கிரண்பேடி நீக்கம்; மக்களை ஏமாற்றும் செயல்: கே.எஸ். அழகிரி விமர்சனம்

Published on

கிரண்பேடியை நீக்கியது மக்களை ஏமாற்றும் செயல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு இன்று (பிப்.17) வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் ஒரு பகுதியாக, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சி முடிவில் கல்லூரியை விட்டு வெளியே வந்த கே.எஸ்.அழகிரியிடம், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "புதுச்சேரி மக்களிடம் உங்களுடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்த கிரண்பேடியை நீக்கி இருக்கிறேன் என்று ஒரு நல்ல பெயரை வாங்குவதற்காக பிரதமர் மோடி இதனைச் செய்துள்ளார்.

புதுச்சேரி மக்கள் மீது மோடிக்கு உண்மையில் அக்கறை இருந்திருந்தால், எப்போது மாநில வளர்ச்சிக்கு கிரண்பேடி தடையாக இருந்தாரோ, அப்பொழுதே அறிவுறுத்தி இருக்க வேண்டும் அல்லது நீக்கி இருக்க வேண்டும். ஒரு அரசை, ஒரு மாநிலத்தை முற்றிலுமாகச் செயலிழக்க வைத்துவிட்டு இப்போது அவரை நீக்கி இருப்பது மிகப்பெரிய தவறான செயல். மக்களை ஏமாற்றுகிற செயல்.

புதுச்சேரி மக்கள் இதனுடைய உண்மை நிலையைப் புரிந்து கொள்வார்கள். இவ்வளவு மோசமாக பாஜக தன்னைக் காட்டிக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. அவ்வளவு மோசமாக தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கிரண்பேடியைப் பதவி நீக்கம் செய்துள்ளது என்பது முற்றிலும் சந்தர்ப்பவாத செயலாகும்" என்றார்.

தொடர்ந்து, அவரிடம் தமிழ் தெரிந்த நபர் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, "தமிழ் தெரிந்த ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை, தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேச முடியுமா?" என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in