

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரதமர் மோடி மெட்ரோ ரயில் உள்ளிட்ட சேவைகளைத் தொடங்கி வைத்தார். விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை, ஆவடி டாங்க் ஆலை பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட ரூ.8,124 கோடிக்கான நலத்திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க சென்னை வந்தார். காலையில் விமானம் மூலம் வந்த அவர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்குச் சென்றார். அங்கு அவரை முதல்வர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கம் வந்தடைந்தார். விழா நடக்கும் நேரு உள் விளையாட்டரங்கம் வரும் வழி எங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரதமர் வரும் வழி எங்கும் அதிமுக, பாஜக தொண்டர்கள் அவருக்குக் கொடி அசைத்து வரவேற்பு அளித்தனர்.
நேரு உள் விளையாட்டரங்கில் பலத்த சோதனைக்குப் பின்னரே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். மேடைக்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேடைக்கு வந்த பிரதமர் மோடி மேடையில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வணங்கினார். பின்னர் அவருக்கு சால்வை அணிவித்த முதல்வர் பழனிசாமி கிருஷ்ணர் சிலை ஒன்றைப் பரிசளித்தார், அதன் பின்னர் துணை முதல்வர் ஓபிஎஸ் சால்வை அணித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
பின்னர் துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்புரையாற்றினார். அடுத்து முதல்வர் பழனிசாமி பேசினார். பிரதமரை நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். பின்னர் பிரதமர் மோடி வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் இடையிலான ரூ.3,370 கோடி செலவில் முடிந்த மெட்ரோ ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் 293.4 கோடி மதிப்பிலான கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான 22 கி.மீ. நான்காவது ரயில் பாதை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மின் மயமாக்கப்பட்ட விழுப்புரம்- கடலூர்- மயிலாடுதுறை- தஞ்சாவூர் - திருவாரூர் ரயில் பாதைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஆவடி டேங்க் ஃபேக்டரியில் தயாரான அர்ஜுனா 1 டாங்க்கை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர் ரூ.2,640 செலவில் கல்லணை வாய்க்காலைப் புதுப்பித்து, நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் சென்னை ஐஐடி டிஸ்கவரி வளாகத்துக்கும் அடிக்கல் நாட்டினார். சென்னைக்கு அருகே, தையூர் என்னுமிடத்தில், ரூ.1000 கோடி மதிப்பில் இந்த வளாகத்தின் முதல் பகுதி, 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.