தலைக்கவசம் அணியாமல் சென்று சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு இழப்பீடு தொகை குறைக்கப்படுகிறது: கிரண்பேடி தகவல்

கிரண்பேடி: கோப்புப்படம்
கிரண்பேடி: கோப்புப்படம்
Updated on
1 min read

தலைக்கவசம் அணியாமல் சென்று சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு இழப்பீடு தொகை குறைக்கப்படுகிறது என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி இன்று (பிப். 13) வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"சாலை விபத்தால் பல இன்னுயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். விபத்தில் 10 பேர் உயிரிழந்தால், அதில் 9 பேர் தலைக்கவசம் அணியாமல் வந்ததால் இறந்துள்ளனர்.

எனவே, தலைக்கவசம் அணிவதை நாம் மறந்துவிடக் கூடாது. தலைக்கவசம் அணிபவர்கள் கூட சில நேரங்களில் அதனைச் சரியான முறையில் அணிவதில்லை. தலைக்கவசத்தைச் சரியான முறையில் அணிய வேண்டும். அதேபோல், தரமில்லாத தலைக்கவசம் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

சாலை விபத்துகள் குடும்பத்தில் வருமானம் ஈட்டித் தரக்கூடிய முக்கிய உறுப்பினர்களின் உயிரைக் குடித்து விடுகிறது. நம்முடைய புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, சாலை விபத்தில் உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் குடும்பத்துக்காக உழைக்கக்கூடிய, வருமானத்தைப் பெருக்கக் கூடியவர்களாக இருந்துள்ளனர்.

தலைக்கவசம் அணியாமல் சென்று சாலை விபத்தில் சிக்கியவர்களுக்குச் சட்டரீதியாக கொடுக்கக்கூடிய இழப்பீடுகள் குறைக்கப்படுகின்றன. தலைக்கவசம் அணியாததைக் காரணம் காட்டி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்புத்தொகையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கின்றன.

தற்போது சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், எப்போது வேண்டுமானாலும் சாலையில் பள்ளங்கள் ஏற்படலாம். எனவே, சாலைகளைச் சரிசெய்தால் விபத்துகள் ஏற்படாது என்று கருதக் கூடாது. எனவே, தலைக்கவசம் அணிந்து செல்வது மிகவும் முக்கியம்.

சாலை விதிகளை நாம் உறுதியாகக் கடைப்பிடிப்பதற்காக அரசுத் துறை சார்ந்த அனைத்துத் துறைகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. தலைக்கவசம் அணியாமல் வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்ட விதிகள் உள்ளன. எனவே, வாகன ஓட்டிகள் தயவுசெய்து தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்".

இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in