

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விதியை மீறி அதிக பணியாட்களைப் பயன்படுத்தியதே விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து காரணமாக பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து உயிரிழப்பு, தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
முதற்கட்டமாக பட்டாசு ஆலையில் விதிமீறல்கள் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக அக்கம் பக்கத்தினர், அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பட்டாசு ஆலைகளில் ஊழியர்கள் எண்ணிக்கை, லைசென்ஸ், தயாரிக்கப்படும் பட்டாசுகள் குறித்த தகவல், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்யவேண்டும்.
ஆனால், வெடிவிபத்து ஏற்படும் நாட்களில் மட்டும் அதுகுறித்துப் பேசுவதும், பின்னர் சாதாரணமாக விதிமீறல் நடப்பதும் வாடிக்கையாக உள்ளது என்கின்றனர். நேற்றைய விபத்துக்குக் காரணமும் அப்பட்டமான விதிமீறலே என்கின்றனர். ஒரு அறைக்கு 4 பேர் பணியில் ஈடுபட வேண்டும் என்றால் அங்கு விதியை மீறி 10 பேர் வரை பணியில் ஈடுபடுத்தப்பட்டதும், அளவுக்கு மீறி பட்டாசுகளைக் குவித்து வைத்திருந்ததும் காரணம் என்கின்றனர்.
மறுபுறம் பட்டாசு ஆலையை லைசென்ஸ் எடுத்தவர் மேல்வாடகைக்கு காண்ட்ராக்ட் முறையில் இயங்க அனுமதித்தார் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். 35க்கும் மேற்பட்ட அறைகளில் ஆட்கள் வேலை செய்வது, வெடிமருந்துகள், தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் ஆகியவற்றால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் அடுத்தடுத்த அறைகள் தீப்பிடித்து வெடித்து இடிந்து தரை மட்டமாகியுள்ளது. குண்டுவெடிப்புக்கு இணையான விபத்து என்பதால் உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகரித்துள்ளன.
இதுபோன்ற பட்டாசு ஆலை விபத்துகளில் பெரும்பாலும் பெண்களே அதிகம் உயிரிழக்கின்றனர். அவர்கள் குடும்பத்துக்கு அளிக்கப்படும் இழப்பீடும் மிகவும் குறைவு என்ற கருத்தும் உள்ளது. பட்டாசு ஆலையை உரிய முறையில் சோதித்து விதிமீறல் தடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற விபத்து ஏற்பட்டிருக்காது என மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைக்கு எடுத்த சக்திவேல் சிவகுமார், பொன்னுவேல் ஆகிய 3 குத்தகைதாரர்கள் உட்பட 6 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தலைமறைவானவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், அதை 25 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க திமுக கோரிக்கை வைத்துள்ளது.