தொகுதி மக்களுடன் சென்று புதுச்சேரி மேரி கட்டிடத்தைத் திறப்பேன்: லட்சுமிநாராயணன் எம்எல்ஏ ஆவேசம்

லட்சுமிநாராயணன்: கோப்புப்படம்
லட்சுமிநாராயணன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தொகுதி மக்களுடன் சென்று மேரி கட்டிடத்தைத் திறப்பேன் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் நாடாளுமன்றச் செயலாளர் லட்சுமிநாராயணன் எம்எல்ஏ ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (பிப். 12) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மேரி கட்டிடத்தை இன்று திறக்க அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. இதைப் பார்த்ததும் உடனே திறப்பு விழாவை நிறுத்துங்கள். உள்துறை அமைச்சகத்தில் இருந்து யாரையும் அழைக்கவில்லை. இதில் மத்திய அரசின் நிதி உள்ளது எனத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

இதில், மத்திய அரசின் நிதி இல்லவே இல்லை. இந்தத் திட்டத்துக்கு யாருடைய பங்களிப்பு இருக்கிறது என்று முழுமையாக விசாரிக்காமல் அவசரக் கோலத்தில் திறப்பு விழாவை நிறுத்தியுள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக எதையுமே விசாரிக்காமல் எல்லா நடவடிக்கையும் எடுத்ததுதான் அவருடைய சாதனையாக உள்ளது.

'ஸ்மார்ட் சிட்டி' மூலம் நிறைய திட்டங்கள் வருகின்றன. இதனால் அரசுக்கு வரும் நல்ல பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மேரி கட்டிடத் திறப்பு விழாவை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த ஆட்சிக் காலத்தில் இதனைத் திறக்கக் கூடாது என்பது மட்டுமே ஆளுநரின் நோக்கமாக உள்ளது. அடிக்கல் நாட்டுவிழாவின் போது ஆளுநரை அழைக்கவில்லை. அப்போது ஏன் தன்னை அழைக்கவில்லை என்று அவர் கேட்கவில்லை. தற்போது தேர்தல் வருவதால் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இதனைச் செய்துள்ளார். ஆளுநர் கூறும் வாதங்கள் முழுவதும் தவறானவை.

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதிராகவே செயல்படுகிற ஒரு ஆளுநரை வைத்துள்ளோம். ஆளுநர் கிரண்பேடி உடனடியாகத் தலைமைச் செயலாளரிடம் கூறி குறிப்பிட்ட தேதியில் திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். இது எனது தொகுதிக்குள் வருவதால் 2 நாட்கள் பார்ப்பேன். இல்லையென்றால், ராஜ்பவன் தொகுதி மக்களுடன் சென்று மேரி கட்டிடத்தைத் திறந்து வைக்கும் வேலையை நான் எடுத்துக் கொள்வேன். இதில், முதல்வருக்கோ, அரசுக்கோ சம்பந்தம் கிடையாது".

இவ்வாறு லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in