

தமிழகத்தில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்களை தமிழக மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் நடத்திய கருத்தரங்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
இந்த கருத்தரங்கில் அரசியல் கட்சிகள் தலைவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:
ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர்:
உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய தொகுப்பு முறையை ஏற்க முடியாது. இந்த பரிந்துரை கூடாது என்னும் கோரிக்கையை மார்க்சிஸ்ட் ஆதரிக்கும். தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்கிற மின்சாரம் எப்படி, தமிழகத்துக்கு மட்டுமே சொந்தமோ அது போலவே, தமிழக அரசு உருவாக்கிய உயர் சிறப்பு மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்துக்கு மட்டுமே இடம் ஒதுக்க வேண்டும்.
இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்:
தமிழகத்தில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பு கொடுப்பதை தடுப்பதற்காக நடத்தப்படும் கருத்தரங்கம் முக்கியமானது. இந்த பிரச்சினையில் தமிழக மருத்துவ மாணவர்கள் வஞ்சிக்கப்படக் கூடாது. எனவே, இது தொடர்பான வழக்கில் தகுதியான வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
வி.வைத்தியலிங்கம், திமுக சட்டத்துறை துணைச் செயலாளர்:
தமிழகத்தில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களை தமிழக மாணவர்களுக்கு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்ற அம்சம் திமுகவின் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.
இந்த நிகழ்ச்சியில் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கருத்தரங்கு குறித்து விளக்கவுரையாற்றினார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பாமக தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.செந்தில், மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.