

புதுச்சேரி காங்கிரஸ் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தன்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தயாரா என்று புதுச்சேரி அரசின் கொறடா அனந்தராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அவர் புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் இன்று (பிப். 11) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மாநில பாஜகவின் செயல் தலைவராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு அனைத்துத் திட்டங்களையும் கடந்த நான்கரை ஆண்டுகளாக தடுத்து வருகிறார். எனவே, தான் அவரை புதுச்சேரியில் இருந்து திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மனு அளித்துள்ளார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்ற மிகப்பெரிய தாக்கமும், தேவையும் ஏற்பட்டுள்ளது. ஒரு யூனியன் பிரதேசம் என்பது நாட்டின் செல்லப்பிள்ளையாக இருக்கும். அந்த செல்லப்பிள்ளைக்கு கூடுதல் நிதி வழங்குவது இயல்பு. இதற்கு மாறாக, மத்தியில் ஆளக்கூடிய பாஜகவால் புதுச்சேரி மாநிலம் பெரிய அளவில் வஞ்சிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற பயத்திலும், பாஜகவின் மிரட்டல் காரணமாகவும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் நமச்சிவாயம் சேர்ந்துள்ளார். 20 ஆண்டுகள் எம்எல்ஏ, 7 ஆண்டுகள் மாநிலத் தலைவர் பதவியை காங்கிரஸில் அனுபவிக்கும்போது காங்கிரஸ் மீது நமச்சிவாயம் குறைசொல்லவில்லை.
கடந்த நான்கரை ஆண்டுகளாக பொதுப்பணி, கலால், உள்ளாட்சி உள்பட வலுவான துறைகளை கையில் வைத்துக்கொண்டு அமைச்சர் பதவியை அனுபவித்துவிட்டு இப்போது சுயநலத்துக்காகவும், பாஜகவின் மிரட்டலுக்காகவும் பாஜகவில் சேர்ந்த நமச்சிவாயம், காங்கிரஸ் பற்றியும், முதல்வர் நாராயணசாமி பற்றியும் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்.
மேலும், சிறுபான்மை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பாஜக பாதுகாப்பு அரணாக விளங்குகிறது என்று கூறியுள்ளார். கடந்தாண்டு தேசிய குடிமையுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை மத்திய மோடி அரசு உருவாக்கியுள்ளது என்று அவரே பல போராட்டங்களை நடத்தியுள்ளார். நமச்சிவாயம் கூறுவதை மக்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள். எனவே, நமச்சிவாயம் நாவடக்கத்தோடு பேச வேண்டும்.
முதல்வரை பற்றி தரம்தாழ்ந்து பேசினால் அவருக்கு சரியான பதில் கொடுக்கப்படும். புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் எவ்வித திட்டங்களும் நடைபெறவில்லை என இப்போது நமச்சிவாயம் கூறுகிறார். நான்கரை ஆண்டுகள் அமைச்சர் பதவியில் அவர் ஏன் இருந்தார் என்பதை விளக்க வேண்டும். புதுச்சேரி அரசின் திட்டங்கள் குறித்து என்னுடன் ஒரே மேடையில் நமச்சிவாயம் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா?
மாநில அந்தஸ்துக்காக தேர்தல் புறக்கணிப்பு என்பது ரங்கசாமி ஒவ்வொரு தேர்தலுக்கும் சொல்வதுதான். அவருடைய கட்சி எம்.பி-யாக இருந்த ராதாகிருஷ்ணன், மாநிலங்களவையில் மாநில அந்தஸ்துக்காக ஏதாவது ஒரு கேள்வி எழுப்பி இருப்பாரா.
எதற்காக புதுச்சேரி மக்களை ஏமாற்ற நினைக்கிறார். அவரது எண்ணமெல்லாம் மாநில வளர்ச்சியை பற்றியது கிடையாது. நாற்காலியை பிடிக்க வேண்டும் என்பதுதான்".
இவ்வாறு அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்தார்.