

டிடிவி தினகரன் அதிமுகவில் இல்லாதவர். ஜெயலலிதா மறைவுக்குப்பின் கட்சிக்குள் வந்து கட்சியையே கைப்பற்ற முயன்றார். 18 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு சென்றுவிட்டார். அவரை நம்பிப் போனவர்கள் நடுத்தெருவில் நின்றனர் என முதல்வர் பழனிசாமி பேசினார்.
முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று வேலூர் மாவட்டத்திலும், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் டிடிவி தினகரனைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இது தொடர்பாக முதல்வர் பேசியதாவது:
“இன்றைக்கு அதிமுகவைப் பின்னடைவு செய்யும் வேலையில் சில பேர் முயன்று வருகின்றனர். டிடிவி தினகரன் பத்தாண்டுகள் அதிமுகவிலேயே கிடையாது. அவரை அடிப்படை உறுப்பினரில் இருந்து ஜெயலலிதா தூக்கினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் இணைந்துகொண்டதாக தினகரனே அறிவித்துக் கொண்டார்.
அவர் இந்தக் கட்சியைக் கைப்பற்ற எவ்வளவு முயற்சி செய்தார் தெரியுமா? எங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் 18 பேரைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார். 18 பேரைக் கொண்டுபோய் நடுரோட்டில் விட்டுவிட்டுப் போய் விட்டார். அவரை நம்பிப் போனவர்கள் நடுரோட்டில் நின்றனர். அவரை நம்பிப் போனால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும்.
இந்த ஆட்சியைக் கவிழ்த்து, திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் அதிமுக முறியடிக்கும்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.