

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சசிகலா வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளதால் அமமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனையை முடித்த சசிகலா, கடந்த ஜன. 27-ம் தேதி விடுதலையானார். கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்ற அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அவர் இன்று (பிப். 8) காலை பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்.
அவரை வரவேற்க ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் மாநில எல்லையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், மற்றும் அமமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதே போல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி, கந்திகுப்பம், பர்கூர், சூளகிரி உள்பட 13 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், சசிகலாவை வரவேற்று ஒசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி முதல் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான பர்கூர் அருகே ஒப்பதவாடி வரையில் வரவேற்று பேனர்களை வைக்கப்பட்டுள்ளன.
இதில், 100-க்கும் மேற்பட்ட பேனர்களை சிலர் அதிகாலையில் கிழித்துள்ளனர். இதனால் அமமுக தொண்டர்கள், சசிகலா ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சசிகலா வருகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவடத்தில், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.