

வரும் தேர்தலில் சீட் பெறுவதில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் ஒன்று பரமக்குடி (தனி) தொகுதி. இத்தொகுதியில் முதலி டத்தில் விவசாயிகளும், அடுத்தபடியாக நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளனர்.
தற்போது இத்தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த என். சதன்பிரபாகர் உள்ளார். 2016-ல் வெற்றி பெற்ற டாக்டர் எஸ்.முத்தையா அமமுகவுக்குச் சென்றதால் இரண்டரை ஆண்டுகளில் எந்த வளர்ச்சிப் பணிகளும் தொகுதியில் நடைபெறவில்லை. அதனால் இத் தொகுதி மக்கள் வெறுப்படைந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் பரமக்குடியில் பாதாளச்சாக்கடைப் பணியும் நிறை வேற்றப்படவில்லை.
இந்நிலையில், தற்போது இத் தொகுதியை கைப்பற்றுவதில் அதிமுக கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. சிட்டிங் எம்எல்ஏ என்.சதன்பிரபாகரே மீண்டும் சீட் கேட்டு முயற்சித்து வருகிறார். அதே சமயம் இத்தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த மருத்துவர் எஸ்.சுந்தர்ராஜூம் சீட் பெற முயற்சிக்கிறார். மேலும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று அமமுக-வில் இணைந்த மருத்துவர் எஸ்.முத்தையாவும், அதிமுகவில் சசிகலா கை ஓங்கினால் சீட் பெறுவதில் மும்முரம் காட்டி வருகிறார். அடுத்ததாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் செயற்பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற மாரி, நயினார்கோவில் அருகே வாணியவல்லம் ஊராட்சித் தலைவராக உள்ள நாகநாதன் ஆகியோரும் சீட் பெற முயற்சிக்கின்றனர். அதேசமயம் பாஜகவும் இத்தொகுதியைக் குறி வைத்துள்ளது. அக்கட்சியின் மாநில பட்டியல் அணித்தலைவர் பொன்.பாலகணபதி சீட் கேட்டு வருகிறார். மேலும் 2 முறை எம்எல்ஏவாக இருந்த தமாகாவைச் சேர்ந்த ராம்பிரபும் முயற் சிக்கிறார்.
இதேபோல, திமுக தரப்பில் சத்திரக் குடி அருகே முத்துவயலைச் சேர்ந்த மாவட்ட பதிவாளராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற எஸ்.பாலு என்பவரும் கடந்த 4 தேர்தல்களாக கட்சியில் சீட் கேட்டு வருகிறார். மேலும் தற்போதே கட்சிக்கு செலவும் செய்து வருகிறார். மேலும் கடந்த இடைத்தேர்தலில் நின்று தோல்வியுற்ற சம்பத்குமார், முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராகவும் உள்ள உ. திசைவீரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக உள்ள செங்கற்சூளை நடத்தி வரும் முருகேசன் உள்ளிட்ட சிலரும் முயற் சித்து வருகின்றனர்.