பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸார் சைக்கிள் ரிக்‌ஷா, மாட்டு வண்டிப் பேரணி 

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸார் சைக்கிள் ரிக்‌ஷா, மாட்டு வண்டிப் பேரணி 
Updated on
1 min read

கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் நடைபெற்ற சைக்கிள் ரிக்‌ஷா, மாட்டு வண்டி பேரணியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்து, மாட்டு வண்டியில் பயணம் செய்தார்.

கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதைக் கண்டித்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் சைக்கிள் ரிக்‌ஷா, மாட்டு வண்டி பேரணி இன்று (பிப்.6) மாலை நடைபெற்றது.

புதுச்சேரி ஏஎஃப்டி திடலில் இருந்து புறப்பட்ட பேரணியைப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தனர்.

இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர்கள் விக்னேஷ், வேல்முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். பேரணியைத் தொடங்கி வைத்த முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் ஏஎஃப்டி திடலில் இருந்து வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை வரை மாட்டு வண்டியில் அமர்ந்து பயணம் செய்தனர்.

தொடர்ந்து பேரணியில் 15-க்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள், 15-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், 2 தட்டு வண்டிகளில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸார், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷமிட்டபடி ஊர்வலமாகச் சென்றனர்.

ஏஎஃப்டி திடலில் இருந்து புறப்பட்ட பேரணி மறைமலையடிகள் சாலை, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, காமராஜர் சாலை வழியாக அண்ணா சிலை அருகில் முடிவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in