ஹெல்மெட் அணிந்து செல்ல திரும்ப திரும்ப வலியுறுத்துவது ஏன்? - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம்

கிரண்பேடி: கோப்புப்படம்
கிரண்பேடி: கோப்புப்படம்
Updated on
1 min read

விபத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள், விபத்தில் சிக்கியவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, எனவே தான், ஹெல்மெட் அணிந்து செல்ல திரும்ப, திரும்ப வலியுறுத்தி வருகிறேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் இன்று (பிப். 6) தனது வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"நாம் சாலை பாதுகாப்பு மாதத்தின் இடைப்பகுதியில் இருக்கிறோம். நான் ஏன் சாலை பாதுகாப்பு குறித்தும், ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் செய்வது குறித்தும் திரும்ப, திரும்ப பேசி கொண்டிருக்கிறேன் என்று பொதுமக்கள் கேட்கலாம்.

என்னுடைய 6 வயதில் எனது தந்தை இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஒரு விபத்தில் சிக்கினார். அப்போது ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனால் நானும், எனது தயாரும், 2 சகோதரிகளும் இன்னல்களை அனுபவித்தோம்.

அன்று மருத்துவர் எனது தயாரிடம் இந்த இரவை தாண்டி உங்களது கணவர் மறுநாள் பிழைப்பது இறைவன் கையில் உள்ளது என்று சென்னார். விபத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள் விபத்தில் சிக்கியவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஆகவே, உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஹெல்மெட் அணியாமல் வெளியே செல்லும்போது, மோசமான சாலை, மின் விளக்கு இல்லாத சாலைகளில் கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஹெல்மெட் அணிந்து சென்றால் தலையில் காயம் ஏற்படாமல் உயிர் பிழைக்க முடியும்.

எனவே தான், திரும்ப திரும்ப சாலை பாதுகாப்பு குறித்தும், ஹெல்மெட் அணிவது குறித்தும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் சாலை விபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in