

புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.67 சதவீதமாக அதிகரித்துள்ளது. புதிதாக 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் இன்று (பிப். 5) தெரிவித்துள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 2,101 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-29, காரைக்கால்-7, மாஹே-14 பேர் என மொத்தம் 50 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும், புதுச்சேரி சேர்மன் தெருவைச் சேர்ந்த 35 வயதுப் பெண்ணும், முத்தியால் பேட்டையைச் சேர்ந்த 67 வயது முதியவரும் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 654 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 சதவீதமாக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரையில் மொத்தமாக 39 ஆயிரத்து 235 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மருத்துவமனைகளில் 128 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 186 பேரும் என மொத்தம் 314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 267 (97.53 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 5 லட்சத்து 86 ஆயிரத்து 350 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 580 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. கடந்த 11 நாட்களில் முன்களப் பணியாளர்கள் 3,168 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".
இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.