

மதுரை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பார்சலால், வெடிகுண்டு பீதி ஏற்பட்ட நிலையில், அதிலிருந்தது மிக்சர் பாக்கெட், ஐபோன் சார்ஜர் என்பது தெரியவந்தது.
மதுரையில் இருந்து பயணிகள் விமான சேவையுடன், வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சரக்குகளைக் கொண்டு செல்லும் கார்கோ விமான சேவையும் உண்டு.
இதற்காக மதுரை விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து முனையத்திலுள்ள பார்சல் சேவை பிரிவில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இங்கிருந்து பலத்த சோதனைக்கு பிறகே பார்சல்கள் விமானத்தில் அனுமதிக்கப்படும்.
இந்நிலையில் கன்னியாகுமாரியைச் சேர்ந்த ஒருவர் சென்னையிலுள்ள தனது நண்பருக்கு அட்டைப் பெட்டியில் அனுப்பிய பார்சல் ஒன்றை இன்று மதியம் கார்கோ அலுவலகத்தில் ஸ்கேன் செய்து, ஆய்வு செய்தனர்.
அதில், சந்தேகிக்கும்படியான அறிகுறி திரையில் தெரிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு பார்சலாக இருக்குமோ என, சந்தேகித்தனர். இதைத் தொடர்ந்து மதுரை காவல் கண்காணிப்பாளர், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், டிஐஜி ராஜேந்திரன் உள்ளிட்டோரும் அங்கு விரைந்தனர்.
மொபைல் கமாண்டே படையினரும் வந்தனர். அவர்கள் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் அந்த சந்தேக பார்சல் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு எடுத்துச் சென்று சோதனை செய்தனர்.
அதில் வயருடன் கூடிய ஐபோன் சார்ஜர், டிஜிட்டல் கடிகாரம், மிக்சர் பாக் கெட், முகத்துக்கு பயன்படுத்தும் பவுடர் டப்பா ஒன்றும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், விமான நிலைய அலுவலர்கள் நிம்மதி அடைந்தனர். விசாரணையில், கன்னியாகுமரியில் இருந்து ஜெயச்சந்திரன் என்பவர் அஞ்சலகம் மூலம் அனுப்பிய பார்சல் எனத் தெரிந்தது.
இது தொடர்பாக அவரிடம் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் மதுரை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.