

புதுச்சேரியில் புதிதாக 39 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் இன்று (பிப்.4) தெரிவித்துள்ள தகவலில், "புதுச்சேரி மாநிலத்தில் 2,050 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 14 பேருக்கும், காரைக்காலில் 10 பேருக்கும், மாஹேவில் 15 பேருக்கும் என மொத்தம் 39 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும் உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 652 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 39 ஆயிரத்து 185 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மருத்துவமனைகளில் 127 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 166 பேரும் என மொத்தம் 293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 25 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 240 (97.59 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 5 லட்சத்து 84 ஆயிரத்து 300 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 540 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்" என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.