

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனை இரவில் சென்று சந்தித்து, கூட்டணி தொடர்பாகப் பேசியதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்கள், சாலைகள் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.4) நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கலந்து கொண்டு கலந்துகொண்டு கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.
காரைக்காலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கு புறவழிச் சாலையை திறந்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
''நிலம் கையகப்படுத்தப்பட்டது உட்பட ரூ.70 கோடி செலவில் காரைக்கால் மேற்குப் புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை இப்பகுதி மக்களுக்கும், பயணிகளுக்கும் மிகப்பெரிய பயனளிக்கும். காரைக்கால் மாவட்டத்தில் நேரு மார்க்கெட் வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பல்வேறு சாலைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் கடந்த 4 மாதங்களில் திறக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை நான் இரவில் ரகசியமாகச் சென்று சந்தித்து, கூட்டணி குறித்துப் பேசியதாக ஒரு பிரபல பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. அது உண்மைக்குப் புறம்பானது. அந்த செய்தியே தவறானது.
எங்கள் கட்சித் தலைமை சொல்லாமல் நான் யாருடனும் கூட்டணி குறித்துப் பேச முடியாது. அதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லாமல் அவர்களும் பேச முடியாது. மக்கள் மத்தியில் குழப்பத்தையும், பிரச்சினையையும் உருவாக்கும் நோக்கில் பல கருத்துக்களைப் பத்திரிகைகள் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது கண்டனத்துக்குரியது.
இப்போது தேர்தல் நேரம் என்பதால் கூட்டணியில் குழப்பம் விளவிக்கும் வேலைகளை சில பத்திரிக்கைகள் செய்கின்றன. இது தேவையில்லாதது. இதுபோன்ற தவறான செய்திகளைப் பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை அந்தந்தக் கூட்டணிகள் அவர்களுக்குரிய வேலைகளைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கின்றனர். காரைக்கால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளைச் சீரமைக்க வரும் 7-ம் தேதி முதல் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்''.
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
திட்டப்பணிகள் தொடக்க நிகழ்வுகளில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், மாவட்டத் துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.