

கிருஷ்ணகிரியில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் கோலார் வட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி தேவி. இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூரில் நிலம் இருக்கிறது. இந்த நிலத்துக்கு பட்டா கோரி சர்வேயரிடம் மனு கொடுத்தார். மனுவை சர்வேயர் அக்பர் பாஷா பெற்றுக் கொண்டார்.
ஆனால், கடந்த 3 மாதங்களாக மனு மீது அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அண்மையில் லட்சுமி தேவியிடன், உங்களுக்கு பட்டா வேண்டும் என்றால் அதற்கு லஞ்சமாக ரூ.80,000 கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார் அக்பர் பாஷா. லட்சுமி தேவியும் முதற்கட்டமாக ரூ.25,000 வழங்கியிருக்கிறார்.
மீதியை வேலை முடிந்ததும் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால், அக்பர் பாஷாவோ மேலும் ரூ.30,000 வழங்கினால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனக் கூறியுள்ளார். இதனால், கவலையடைந்த லட்சுமி தேவி கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் அவர்கள் அளித்த ரசாயனம் தடவிய நோட்டுகள் அடங்கிய ரூ.30,000 பணத்தை சர்வேயர் அக்பர் பாஷாவிடம் அளித்தார் லட்சுமி தேவி அளித்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஞானசேகரன் மற்றும் போலீஸார் அக்பர் பாஷாவை கையும் களவுமாக கைது செய்தனர். அக்பர் பாஷா ஒசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.