

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்ந்தவர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அவரை தெய்வமாகக் கருதி, அவர் இருக்கும் இடத்தில் காலணி கூட அணிவதை தவிர்த்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரை தமிழர் குலச்சாமி, தமிழர்களின் தெய்வம் எனப் பேசி வருகிறார். அவரது பெயரில் ‘அம்மா சேரிடபிள் டிரஸ்ட் ’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலம் பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகு திக்குட்பட்ட டி.குன்னத்தூரில் அம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் சுமார் 12 ஏக்கரில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கோயில் கட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டமிட்டார். 2021 சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாகத் திறக்க வேண்டும் எனக் கருதி அதற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
அமைச்சர் மட்டுமின்றி அம்மா சேரிடபிள் டிரஸ்ட் தலைவரும் அமைச்சரின் தந்தையுமான போஸ், பொருளாளரும் அவரது தாயாருமான மீனாள், செயலரும் மகளுமான பிரியதர்ஷனி, மற்றொரு மகளும் இயக்குநருமான தனலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கோயில் கட்டும் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டனர்.
இதன்படி, சுமார் 14 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான பீடத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு வெண்கலச் சிலைகள் அமைக்கப் பட்டன. ஒவ்வொரு சிலையும் தலா 400 கிலோ எடை கொண்டது. இரு சிலைகளின் அருகில் சிங்கங் களின் சிலைகளும் அமைக்கப் பட்டுள்ளன.
இக்கோயில் வளாகத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம், போட்டித்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கான பயிற்சி மையம், நூலகம், சுற்றியுள்ள கிராமத்தினருக்கு அம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் டியூசன் கற்றுத் தரும் கூடம், கோயிலை சுற்றிலும் பூங்காக்கள், காலதேவி கோயில், 18 சித்தர்களின் தலங்களும் அமைக் கப்பட்டுள்ளன. கோயில் முகப்பில் தமிழர் குலச்சாமி என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலைத் திறக்கும் வரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காப்பு கட்டி விரதம் இருந்தார். யாகசாலை பூஜைகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தி ஜன.30-ல் இக்கோயிலை முதல்வர் கே.பழனி சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இவ்விழாவில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பேசும்போது, `மக்களுக்காக வாழ்ந்து மறைந்த இரு பெரும் தலைவர்களுக்கு நாமெல்லாம் பிள்ளைகளாக இருந்தாலும், இதில் ஒருவராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இவ்வளவு பெரிய ஆலயம் எழுப்பி, இரு தலைவர்களுக்கும் நன்றி செலுத்தியுள்ளார். அவரது இந்த முயற்சி நமது கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களையும் கவர்ந்துள்ளது' என்று பாராட்டினர்.
விழாவில் கோ பூஜை நடத்தி 120 பேருக்கு பசு மாடுகள் தானமாக வழங்கப்பட்டன. கட்சியில் நலிவுற்ற மூத்த உறுப்பினர்கள் 234 பேருக்கு பொற்கிழி பரிசுகளும் வழங்கினர். கோயில் திறப்பு விழாவையொட்டி ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கோயிலுக்கு வருவோருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
சரித்திரம் படைத்த தலைவிக்கு சாமானிய தொண்டன் கட்டிய கோயில் என, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குறிப்பிட்டாலும், பிற மாவட்டங்களிலும் ஜெயலலிதா வுக்கு கோயில் எழுப்பும் சிந் தனையை அமைச்சர் தூண்டி யிருப்பதாகவே நிர்வாகிகள், தொண்டர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
நாட்டில் எத்தனையோ அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே சாதாரண கடைக்கோடி தொண்டர்களையும் தேர்தலில் நிற்கச் செய்து, வெற்றி பெற வைத்து பதவி வழங்கி செல்வாக்கு மிக்கவர்களாக மாற்றியவர். இது போன்ற தலை வருக்கு என்னைப் போன்ற சாதாரண தொண்டன் கோயில் கட்டுவதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது.
எம்ஜிஆர், ஜெயலலிதா கோயில் இப்பகுதியினரை வெகுவாக ஈர்த்துள்ளது. அதிமுக தொண் டர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மதுரையில் கோயில்களுக்குப் போகும் பக்தர்கள் ஜெயலலி தாவின் கோயிலுக்கும் செல்ல வேண்டும் என நினைக்கத் தவறமாட்டார்கள். இங்கு வழிபாடு மட்டுமின்றி ஜெயலலிதாவின் பெய ரால் சாமானியர்களும் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் பயிற்சி மையம் போன்ற கல்விச் சேவை களையும் தொடருவோம் என்றார்.
கோயில் திறப்பு விழாவில் ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளர்கள் இளங்கோவன், ஆர்விஎன். கண்ணன், எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.சரவணன், பெரிய புள்ளான், மதுரை மேற்கு மாவட்ட அவைத் தலைவர் அய்யப் பன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலர் பா.வெற்றிவேல், பேரவை மாவட்டச் செயலாளர் தமிழழகன், திருப்பரங்குன்றம் பகுதி துணைச் செயலாளர் ஐபிஎஸ் பாலமுருகன் மற்றும் முனியாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.