சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் தேசிய அளவில் புதுச்சேரி முதலிடம்: கிரண்பேடி தகவல்

சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் தேசிய அளவில் புதுச்சேரி முதலிடம்: கிரண்பேடி தகவல்
Updated on
1 min read

சாலை விபத்தில் தேசிய அளவில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது வாட்ஸ் அப்பில் இன்று (ஜன.30) வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

''நாம் இப்போது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தைக் கொண்டாடி வருகிறோம். சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் தேசிய அளவில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்துக்கு சராசரியாக 14 பேர் உயிரிழக்கின்றனர்.

ஆனால், புதுச்சேரியில் 1 லட்சத்துக்கு 72 பேர் உயிரிழக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். சாலைகளைச் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சாலை விதிகளை மீறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த மூன்று விதங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை பராமரிப்புக்கான நிதியுதவியை ஏற்கெனவே வழங்கியுள்ளோம். அதற்கான பணியைப் பொதுப்பணித் துறையும், உள்ளாட்சித் துறையும் தொடங்கியுள்ளன. தற்போது அந்தப் பணி நடந்துகொண்டு வருகிறது.

இருசக்கர வாகனத்தில் விரைவாகச் செல்லக் கூடிய மக்கள் ஹெல்மெட் அணிவதில்லை. இதனால் பலர் தங்களது இன்னுயிரை இழக்கின்றனர். தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்திய மோட்டார் வாகனச் சட்டம் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வோருக்கு ரூ.1000 அபராதம் விதிப்பதுடன் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தடை செய்யப்படும். எனவே, அவர்கள் 3 மாதங்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட முடியாது.

இருசக்கர வாகன ஓட்டிகள் அவர்களது உயிரை இழந்துவிடக் கூடாது. அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினர் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. எனவே தயவுசெய்து நீங்கள் (இருசக்கர வாகன ஓட்டிகள்) ஹெல்மெட் அணிந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். தலைமைச் செயலர் தலைமையில் டிஜிபி, போக்குவரத்துச் செயலர் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு தொடர்ந்து இதனைக் கண்காணிக்கும். ராஜ்நிவாஸ் மூலம் இதற்காக ஒவ்வொரு மாதமும் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். சாலை பராமரிப்பு தொடர்பான குறைகளை 1031 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். அதற்கான நடவடிக்கையை இந்தக் குழு எடுக்கும். சாலை பாதுகாப்பு மாதத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உங்களது இன்னுயிரைப் பாதுகாத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in