சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: முதல்வர் நாராயணசாமிக்கு புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்
சொந்தக் கட்சியில் ஆதரவு இல்லாத நிலையில் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமியைப் புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ இன்று (ஜன 29) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தமிழகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டது. அவருடைய பிறந்த நாளை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவருக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
ஜெயலலிதாவுக்குச் சிலை அமைக்க வேண்டும் என அதிமுக வைத்த கோரிக்கையை புதுச்சேரி அரசு ஏற்றும் சில அரசியல் காரணங்களுக்காக முதல்வர் நாராயணசாமி இதுவரை சிலை அமைக்க மறுத்து வருகிறார். தனது தவறைத் திருத்திக்கொண்டு தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் ஜெயலலிதா பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் கால அறிக்கையில் 85 சதவீதம் நிறைவேற்றி உள்ளதாக முதல்வர் கூறி வருகிறார். ஆனால், ஒன்றைக் கூடச் செயல்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியின் பிரதான தேர்தல் அறிவிப்புகளான இலவச அரிசி, 100 யூனிட் மின்சாரம் இலவசம், முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட எதையுமே செயல்படுத்தவில்லை.
தற்போது முதல்வரின் செயல்பாடுகள் சரியில்லை என ஆளும் கட்சியின் அமைச்சராக இருந்த நமச்சிவாயம், எம்எல்ஏவாக இருந்த தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து மாற்றுக் கட்சியில் இணைந்துள்ளனர். உண்மையில் முதல்வர் நாராயணசாமிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் தாமாக முன்வந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
சொந்தக் கட்சியிலேயே அவருக்கு ஆதரவு இல்லை. ஒரு ஆட்சி நடத்த அறுதிப் பெரும்பான்மையை இழந்து பலவீனமாக உள்ள முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்யவில்லை என்றால் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
புதுச்சேரியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்திக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அதிமுக தலைமையின் அனுமதியுடன் இது தொடர்பான கடிதத்தைத் துணைநிலை ஆளுநருக்கு வெகுவிரைவில் வழங்குவோம்.
மக்கள் விரோத காங்கிரஸ் அரசால் அரசு நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. இதனை உணர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்கத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு சட்டப்பேரவையைக் கூட்ட உத்தரவிட வேண்டும். ஆளும் கட்சியில் இருந்து, அரசை எதிர்த்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் யார் வெளியே வந்து கூட்டணி கட்சியில் இணைந்தாலும் வரவேற்போம்''.
இவ்வாறு அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.
