விமர்சையாக நடந்தது சென்னிமலை தைப்பூசத் தேரோட்டம்

விமர்சையாக நடந்தது சென்னிமலை தைப்பூசத் தேரோட்டம்
Updated on
1 min read

ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க, சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம் இன்று காலை விமர்சையாக நடந்தது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம், கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கைலாசநாதர் கோயிலில், வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று காலை 6 மணிக்கு தைப்பூசத் தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரோ கோஷத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்து, தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தினார்கள். இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் இழுக்கப்பட்டு வடக்கு ராஜவீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது. நாளை (29-ம் தேதி) மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்க்கப்படுகிறது.

பிப்ரவரி 1-ம் தேதி (திங்கள்) இரவு 7 மணி அளவில் மகா தரிசனம் நடைபெறுகிறது. அப்போது நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.. தொடர்ந்து நான்கு ராஜ வீதிகள் வழியாக சுவாமிகள் வலம் வந்து இரவு 11 மணிக்கு கைலாசநாதர் கோயிலுக்குள் அழைத்து செல்லப்படுகிறார்கள். பிப்ரவரி 2-ம் தேதி (செவ்வாய்) மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெறுகிறது.

தேர் திருவிழா ஏற்பாடுகளை ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, சென்னிமலை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தேரோட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதுள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தேரோட்ட தினத்தன்று தேவஸ்தான திருமண மண்டபத்தில் நடைபெறும் அன்னதானம் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in