

வட்டமலை கரை ஓடை அணைக்குத் தண்ணீர் விட வலியுறுத்தி தேசியக் கொடி ஏந்தி விவசாயிகள் அணைக்குள் இன்று அணிவகுத்துச் சென்றனர்.
இது தொடர்பாக வட்டமலை அணை பாதுகாப்புக் குழு சார்பில் விவசாயிகள் கூறுகையில், ''எங்கள் பகுதியில் உள்ள இந்த அணையை நம்பி ஏராளமான விவசாயிகள் வாழ்ந்து வருகிறோம்.
தொடர்ச்சியாக பாசனம் இல்லாததால், பல விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தோர் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்களாக வாழத் தொடங்கிவிட்டனர். அணை எந்த நோக்கத்துக்காகக் கட்டப்பட்டதோ, அந்த நிலையில் விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை என்பதுதான் உண்மை. வட்டமலை ஆற்றின் குறுக்கே 600 ஏக்கர் பரப்பில், 6050 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் 30 அடி உயரத்துக்கு 1980-ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது.
1985-ம் ஆண்டு முதல் அணைக்குத் தண்ணீர் வரத்து இன்றி, பிஏபி பாசனத் தொகுப்பில் இருந்தும் உபரி நீர் திறக்க அரசாணை இருந்தும், தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக அணை வறண்டு வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. அதேபோல் அமராவதி ஆற்றிலும் நான்கு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 10 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாகக் கலந்தது. இதனை நீரேற்றுத் திட்டத்தின் மூலம் வட்டமலை அணையில் சேர்க்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் அணைகளில் நீர் ததும்பும் நிலையில், வட்டமலை ஓடை அணை வறண்டு கிடக்கிறது.
இதனால் இந்த அணை மூலம் பாசனம் பெறும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம்.இதனை வெளிப்படுத்தவே தேசியக் கொடி ஏந்தி அணிவகுப்புப் போராட்டம் செய்தோம். இந்த நிலை நீடித்தால் எஞ்சியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமும் தொலையும். இருக்கும் விவசாயிகளைக் காப்பாற்ற இந்த அணையில் நீர் நிரப்பி பாசனத்துக்கு உதவ வேண்டும். பல ஆண்டுகளாக பல நூறு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்வது, உள்ளபடியே எஞ்சியுள்ள விவசாயிகளை அச்சமடைய வைத்துள்ளது'' என்றனர்.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் எனப் பலரும், கையில் தேசியக் கொடியுடன் அணைப் பகுதியில் அணிவகுத்து அணைக்கு உடனடியாகத் தண்ணீர் திறக்க வலியுறுத்தினர்.