

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் மா மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளதால், நிகழாண்டில் நல்ல மா விளைச்சல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. சந்தூர், ஜெகதேவி, தொகரப்பள்ளி, போச்சம்பள்ளி, ஆலப்பட்டி, மாதேபட்டி, ராயக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தோத்தாபுரி ரகம் 60 சதவீதமும், செந்தூரா மற்றும் நீலம் ரகங்கள் 30 சதவீதமும், அல்போன்ஸா ரகம் 5 சதவீதமும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பீத்தர், மல்கோவா, ருமானி, பங்கனப்பள்ளி, காலப்பாடு ரக மா வகைகள் 5 சதவீதம் அளவுக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முன் பருவ ரகமான செந்தூரா, பீத்தர் ஆகிவை நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் பூக்கள் பூத்து பிஞ்சுகள் விட ஆரம்பிக்கும். மத்திய பருவ ரகங்களான பெங்களூரா, பங்கனப்பள்ளி, அல்போன்ஸா, சேலம் பெங்களூரா, இமாம்பசந்த், குதாதத் போன்றவற்றில் இந்த கால கட்டத்தில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். கடைசி பருவ ரகங்களான நீலம், மல்கோவா ரக மா மரங்களில் இலைகள் துளிர்விடும். இந்நிலையில், நிகழாண்டில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மா மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளன.
இதுகுறித்து மா விவசாயிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு செயலாளர் சவுந்திரராஜன் கூறும்போது, ‘‘மா விவசாயிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். நிகழாண்டில் நீர் பாய்ச்சும் (இறவை) மாந்தோப்புகளில் உள்ள மா மரங்களில் பூக்கள், பூக்கத் தொடங்கி உள்ளன. மானாவாரியாக வளர்க்கப்படும் மா மரங்களில் ஓரிரு இடங்களில் பூக்கள் தென்படுகின்றன.
பரவலாக நல்ல மழை பெய்துள்ளதால், மா விளைச்சல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பூக்கள் அதிகளவில் பூத்தாலும், பூச்சித் தாக்குதல் இருக்கும். பூச்சி மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களை மானிய விலையில் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பூச்சிகளை கட்டுப்படுத்த தேவையான மருந்துகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்ப நிலை அதிகரித்து வருவதால் மா மரங்களில் அதிகளவில் பூக்கள் பூக்கத் தொடங்கும்,’’ என்றார்.