

திருநின்றவூரில் நிலவிவரும் மின் பிரச்சினைகள் தொடர்பான செய்தி ‘தி இந்து’வில் புதன்கிழமை வெளியானதும் அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் ஒரு புதிய மின்மாற்றியை நிறுவியுள்ளனர்.
‘திருநின்றவூரில் 8 மணி நேர மின்தடை’ என்ற தலைப்பில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் புதன் கிழமை (ஜூன் 25) செய்தி வெளியானது. அது தொடர்பாக மின்துறை துணை இயக்குநர் (மக்கள் தொடர்பு அதிகாரி) சில விளக்கங்களை அளித்துள்ளார். விவரம்:
கிருஷ்ணபுரம், லட்சுமிபுரம், தாசர்புரம், சிடிஎச் சாலை ஆகிய பகுதிகளில் பழைய மின் மாற்றிகள் இருப்பதே அங்கு மின்தடை ஏற்படுவதற்கான முக்கிய காரணம். அங்கு உடனடியாக புதிய மின்மாற்றி நிறுவப்பட்டுள்ளது. இதுபோல் மேலும் ஒரு மின்மாற்றியை அங்கு ஒருவார காலத்துக்குள் நிறுவவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் 8 மணி நேர மின் தடை ஏற்படவில்லை. இரவு நேரங்களில் குளிர்சாதன இயந்தி ரங்களை 9.30 மணி முதல் 11.30 மணி வரை அதிக அளவில் பயன்படுத்தும்போது, குறுகிய காலத்துக்கு மட்டும் 30 நிமிடங்கள் வரை மின்தடை ஏற்படுகிறது. அதுவும், அங்குள்ள துணை மின் நிலைய உபகரணங்களுக்கு நிரந்தர சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது.
மின்மாற்றி திறன் அதிகரிப்பு
அந்த குறையையும் தீர்ப்பதற் காக இன்னும் 10 நாட்களுக்குள், 10 மெகா வோல்ட் ஆம்பியர் திறன் கொண்ட மின்மாற்றியை 16 எம்விஏ திறன் கொண்டதாக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.