

சட்டப்பேரவைத் தேர்தலின்போது கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் கூடுதலாக 417 வாக்கு சாவடி மையங்கள் அமைக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
2021-ம் ஆண்டில் நடக்க உள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான தர்மபுரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலின் படி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 12 லட்சத்து 60 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு 40 ஆயிரத்து 640 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
15 ஆயிரத்து 265 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களில் 30 ஆயிரத்து 475 பேர் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆவர். மாவட்டத்தின 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 1478 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
கரோனா தொற்று சூழல் காரணமாக ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் என்ற அடிப்படையில் மாவட்டத்தில் புதிதாக 417 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோர பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.