கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் ஏழு பேர் விடுதலை: குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என தீர்ப்பு 

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் ஏழு பேர் விடுதலை: குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என தீர்ப்பு 
Updated on
2 min read

கொடைக்கானல் மலைப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், அரசுத் தரப்பில் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி ஏழுபேரும் விடுதலைசெய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி பொய்யாவெளி என்ற வனப்பகுதியில் 2008-ம் ஆண்டு மாவோயிஸ்ட்கள் சிலர் ஆயுதப்பயிற்சி மேற்கொள்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸார் வனப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். இதில் தருமபுரியைச் சேர்ந்த மாவோயிஸ்ட் நவீன்பிரசாத் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

தப்பியோடியவர்களில் ரஞ்சித், நீலமேகம், கண்ணன், பகத்சிங், ரீனாஜாய்ஸ்மேரி, செண்பகவல்லி, காளிதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொடைக்கானல் போலீஸார் இந்திய வெடிமருந்து சட்டம், இந்திய ஆயுதங்கள் சட்டம், சட்டவிரோத தடுப்புசட்டம் உள்ளிட்ட 18 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. 300 பக்க குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய ரஞ்சித், நீலமேகம் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மற்ற ஐந்து பேர் வேறு சில வழக்குகளில் தொடர்புள்ளதால் அவர்கள் தொடர்ந்து பல்வேறு சிறைகளில் இருந்துவந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் உள்துறை செயலர் நிரஞ்சன்மார்டி உள்ளிட்ட 44 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். மாவோயிஸ்ட்கள் தரப்பில் வழக்கறிஞர் கண்ணப்பன் சாட்சிகளிடம் குறுக்குவிசாரணை செய்தார்.

ஏகே 47 துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட 210 சான்று பொருட்கள் மற்றும் 33 ஆவணங்கள் நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டது.

2008-ம் ஆண்டு தொடங்கிய வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை கடந்த டிசம்பர் 15-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து ஜனவரி 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா அறிவித்தார்.

இதையடுத்து இன்று திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ரீனாஜாய்ஸ்மேரி அழைத்துவரப்பட்டார்.

தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து வேலூர் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ரீனாஜாய்ஸ்மேரி திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

ஜாமீனில் உள்ள ரஞ்சித், நீலமேகம் ஆகியோரும் நேற்று ஆஜராகினர். இந்த வழக்கில் தொடர்புடைய காளிதாஸ் கேரள மாநிலம் கண்ணூர் சிறையில் இருந்தும், கண்ணன், பகத்சிங், செண்பகவல்லி ஆகியோர் பல்வேறு சிறைகளில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜராகினர். நேற்று மாலை உணவு இடைவேளைக்கு பிறகு தனது தீர்ப்பை நீதிபதி ஜமுனா வாசித்தார்.

இதில், கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் குற்றச்சாட்டுக்கள் அரசு தரப்பில் சரிவர நிரூபிப்பக்கப்படாததால் ஏழு பேரும் விடுதலைசெய்யப்படுவதாக தெரிவித்தார்.

ரஞ்சித், நீலமேகம் தவிர மற்ற ஐந்து பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர்கள் மற்ற வழக்குகளில் இருந்து விடுதலையாகும் வரை தொடர்ந்து சிறையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரீனாஜாய்ஸ்மேரியை பலத்த பாதுகாப்புடன் மீண்டும் வேலூர் சிறைக்கு போலீஸார் அழைத்துச்சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in