

மன்னார் வளைகுடா பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''மன்னார் வளைகுடா பகுதியில் ஏராளமான அரியவகை மீன்கள், கடல் பறவைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள், கடல் பாசிகள் வாழ்கின்றன. இப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேவையற்ற பழைய மீன்பிடி வலைகளைக் கடலில் வீசிச் செல்கின்றனர். இந்தக் கடல் பகுதி முழுவதும் மாசடைந்து, கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா பகுதியில் 6 முதல் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துள்ளன. ஏற்கெனவே மன்னார் வளைகுடா ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கழிவு மீன்பிடி வலைகளை அகற்றி கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகளைப் பாதுகாக்க உரிய உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, அடுத்த விசாரணையை பிப்.15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.