

கோவையில் உள்ள பெரியகுளம், சிங்காநல்லூர் குளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம், குமாரசாமி குளம், செல்வாம்பதி குளம், குறிச்சி குளம், கிருஷ்ணாம்பதி குளம், நரசாம்பதி குளம் ஆகியவை நிலத்தடி நீர்மட்டம் உயர உதவியாக உள்ளன. இந்நிலையில், இக்குளங்களில் அதிக அளவில் கழிவுநீர் கலப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "குளங்களைச் சுற்றியுள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக குளத்தில் கலக்கிறது. மேலும், ஆகாயத்தாமரையும் குளம் முழுவதும் படர்ந்துள்ளன. இதனால் குளங்களின் நீர் முற்றிலும் மாசடைகிறது.
மாநகராட்சியில் 60 வார்டுகளின் சில பகுதிகளில் மட்டுமே பாதாள சாக்கடைத் திட்டம் முழு அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் வீட்டு இணைப்புப் பணி முடியவில்லை. தற்போது உக்கடத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. ஒண்டிப்புதூர் சுத்திகரிப்பு நிலையம் முழு பயன்பாட்டில் இல்லை. நஞ்சுண்டாபுரத்தில் தற்போதுதான் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகளை விரைவாக முடித்து, குளத்துக்குள் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும். தேவையான இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்’’ என்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘குளங்களில் ஆகாயத்தா மரை படர்வதைத் தடுக்கவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. கோவையில் 9 குளங்களுக்கு நீர் வரும் பாதை, தண்ணீர் வெளியேறும் பாதை, அதிக அளவில் கழிவுநீர் கலக்கும் குளம் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரியகுளத்தில் அதிக அளவில் கழிவுநீர் கலப்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு குளத்தின் தேவைக்கேற்ப கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மேலும், கழிவுநீரை சுத்திகரிக்கும் தாவரங்களும் வளர்க்கப்படும்" என்றனர்.