

புதுச்சேரியில் தொடர் மழையால் 90 சதவீத விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ஆய்வுக்குப் பின்னர் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை மற்றும் நிவர், புரெவி புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த மாதம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.
இந்த நிலையில் ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து புதுச்சேரியில் மழை பெய்தது. அவ்வப்போது கனமழையும் கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. வயல்களிலும் தண்ணீர் தேங்கியதால் பாகூர், திருபுவனை, திருக்கனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யத் தயார் நிலையில் இருந்த 5000க்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நாசமடைந்தன.
மேலும் சாய்ந்த நெற்பயிர்களில் குறைந்த அளவு நெல்மணிகள் முளைத்த நிலையில் தற்போது முற்றிலும் முளைத்துக் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். மேலும் தண்ணீர் வடிவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் கொடாத்தூர், ஆண்டியார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் நாராயணசாமி, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் இன்று (ஜன.15) வேளாண்துறை அதிகாரிகளுடன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். விவசாய நிலங்களில் இறங்கிய அவர்கள் நெற்பயிர்களைப் பார்வையிட்டு விசாயிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தனர்.
பின்னர் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
‘‘காலம் தவறி மழை பெய்ததால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்து மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 90 சதவீதம் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கொடாத்தூர் பகுதிகளில் சுமார் 150 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நானும், அமைச்சர் கமலக்கண்ணனும் விவசாய நிலங்களில் இறங்கி ஆய்வு செய்தோம். அனைத்து நெற்பயிர்களும் முளைத்துள்ளன. இந்த நெற்பயிகளை அறுவடை செய்ய முடியாது. விவசாயிகளுக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக அவர்களுக்கு நிதியைக் கொடுக்க வேண்டும் என்றும், அரசு அவர்களுக்கு எந்த அளவுக்கு உதவி செய்ய முடியும் என்றும் அமைச்சரவையைக் கூட்டி முடிவு செய்வோம்.
காலம் தவறிப் பெய்யும் மழையாலும், விக்ரவாண்டி பகுதியில் இருந்து வெளியேறும் உபரிநீராலும் கொடாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்து பாதிப்பு ஏற்படுகிறது. புதுச்சேரியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை விவசாயத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யக் கூறியுள்ளோம்.
அவர்கள் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் அதற்கு என்ன நிவாரணம் கொடுப்பது என்பது குறித்து நடவடிக்கை எடுப்போம். செட்டிப்பட்டு பகுதியில் ஆற்றில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு கண்டிப்பாக இழப்பீடு வழங்குவோம்’’.
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.