

இரண்டு அல்லது 3 நண்பர்களுக்காக விவசாயிகளை அழிக்க மத்திய அரசு சதி செய்கிறது. ஆனால், விவசாயிகள் பக்கம் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார யுக்தியாக, மதுரை அவனியாபுரத்தில் இன்று நடந்துவரும் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மதுரை வந்தார். இதற்காக காங்கிரஸ் கட்சி ராகுலின் தமிழ்வணக்கம் எனும் திட்டத்தை தயாரித்துள்ளது.
அவனியாபுரத்தில் நடந்துவரும் ஜல்லிக்கட்டுப்போட்டியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ரசித்துப் பார்த்தார். அவருடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகரி, காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
அதன்பின் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இரு அல்லது 3 நண்பர்களின் நலனுக்காக விவசாயிகளை அழிக்க சதிசெய்கிறது. விவசாயிகள் போராட்டத்தையே மத்திய அரசு புறக்கணிக்கிறது, விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை.
வேளாண் சட்டங்கள் நடைமுறைக்குவந்தால், அந்த நிலங்கள் விவசாயிகளிடம் இருந்து பறித்துக்கொண்டு, அந்த நிலங்களை தங்களின் நண்பர்களுக்கு வழங்க மத்திய அரசு விரும்புகிறது. ஒரு சிலரின் வர்த்தக நலனுக்காக மத்திய அரசு விவசாயிகளை நசுக்குகிறது.
இந்த நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள்தான் இருக்கிறார்கள். விவசாயிகளை நசுக்கினாலும், கஷ்டப்படுத்தினாலும் நாம் தொடர்ந்து வளர்ச்சி அடையலாம் என யாரேனும் நினைத்தால், நம் நாட்டின் கடந்த கால வரலாற்றைப் பாருங்கள்.எப்போதெல்லாம் இந்திய விவசாயிகள் பலவீனப்பட்டார்களோ அப்போதெல்லாம் இந்தியா பலவீனமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும். வேளாண் சட்டங்கள் ஒட்டுமொத்தமாக திரும்பப் பெற வேண்டும்.
கரோனா வைரஸ் பரவல் காலத்தில் சாமானிய மக்களுக்கு பிரதமர் மோடி எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. யாருக்கு பிரதமராக மோடி இருக்கிறார். இந்திய மக்களுக்காக பிரதமராக மோடி இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா.
இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார். இந்தியாவின் எல்லைக்குள் ஏன் சீன ராணுவத்தினர் அமர்ந்திருக்கிறார்கள்
இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.