

புதுச்சேரிக்கு கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி இன்று (ஜன 13) மாலை வந்தது. வரும் 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்று கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கரோனா தொற்றால் இந்தியாவில் 1.05 கோடி பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, புதுச்சேரியில் இதுவரை 38 ஆயிரத்து 524 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 639 பேர் உயிரிழந்துள்ளனர்.
37,607 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதற்கிடையே கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, இறுதிக்கட்டப் பரிசோதனைகள் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த 2, 8 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் 2 கட்டமாக கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
இதனிடையே முதற்கட்டமாக மருத்துவர், செவிலியர் உட்பட மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று (ஜன.13) மாலை 17,500 டோஸ் கோவிஷீல்டு மருந்து புதுச்சேரிக்கு வந்தது. இந்தத் தடுப்பூசி போடும் பணி வரும் 16-ம் தேதி தொடங்க இருக்கிறது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறுகையில், ‘‘கோவிஷீல்டு என்ற கரோனா தடுப்பூசி இன்று மாலை புதுச்சேரிக்கு வந்து சேர்ந்துள்ளது. ஒரு பாட்டில்களுக்கு 10 டோஸ் வீதம் 1,750 பாட்டில்கள் வந்துள்ளன. அதனைக் குளிர்பதன வசதியில் வைத்துள்ளோம். மாஹேவுக்கு இன்னும் மருந்து வந்து சேரவில்லை. நாளைக்குள் மருந்து வந்துவிடும்.
ஏனாம் மருத்துவமனையில் 320 டோஸ் மருந்து வந்துள்ளது. காரைக்காலுக்கும் சேர்ந்து புதுச்சேரிக்கு மருந்து வந்துள்ளது. வரும் 16-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இந்தத் தடுப்பூசி போடும் பணி தொடங்கும்’’ என்றார்.
7 மையங்களில் தடுப்பூசி முகாம்:
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருந்துவமனை, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, மாஹே அரசு பொது மருத்துவமனை, ஏனாம் அரசு பொது மருத்துவமனை ஆகிய 7 மையங்களில் காலை 9 மணிக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.
ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டுமே தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை 7 மருத்துவமனைகளின் அதிகாரிகளுக்கு மருத்துவ அதிகாரி முருகன் அனுப்பியுள்ளார்.