சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சிஐஎஸ்எப் அதிகாரிகள் திடீர் ஆய்வு: மத்திய படையிடம் பாதுகாப்பு ஒப்படைப்பு?

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சிஐஎஸ்எப் அதிகாரிகள் திடீர் ஆய்வு: மத்திய படையிடம் பாதுகாப்பு ஒப்படைப்பு?
Updated on
2 min read

உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) அதிகாரிகள் நேற்று திடீரென ஆய்வு செய்தனர்.

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி கடந்த செப்டம்பர் 14-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு நீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி எதிரில் அமர்ந்து வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பான சூழ்நிலையில் பணி செய்வதை உறுதி செய்வதற்காக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படை அல்லது வேறு சிறப்பு அமைப்பிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை என்றும் தமிழக காவல்துறையினரே போதும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு கடந்த 12-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘வழக்கறிஞர்கள் - காவல் துறையினர் இடையே பரஸ்பரம் நம்பிக்கை இல்லாத தற்போதைய சூழ்நிலையில், உயர் நீதிமன்றத்துக்கு நிபுணத்துவம் பெற்ற ஒரு சுதந்திரமான அமைப்பு மூலம் உயர் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அவ்வாறு வழங்கினால், தற்போதைய சூழல் மாறி சுமுகமான சூழல் உருவாகும். பாதுகாப்புப் பணியில் தமிழக காவல் துறையினரை விலக்கிக் கொள்ளாமல், கூடுதலாக சுதந்திரமான அமைப்பைக் கொண்டு பாதுகாப்பு அளிக்கலாம்’’ என தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

வரும் 30-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஆவடியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை(சிஐஎஸ்எப்) துணை கமாண்டன்ட் மனோகர் தலைமையில் 7 அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் நேற்று காலை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பாதுகாப்பு போலீஸார் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் சிலரைத் தவிர வேறு யாரும் இல்லை. சுமார் ஒன்றரை மணி நேரம் அவர்கள் நீதிமன்ற வளாகத்தை சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தனர்.

எத்தனை நுழைவாயில்கள் உள்ளன, போலீஸ் பாதுகாப்பு அதிகமாக தேவைப்படும் இடங்கள் எவை, மொத்தம் எத்தனை போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு தேவைப்படுவர் என்பது குறித்து அவர்கள் ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மத்தியப் படை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்திருப்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பு விரைவில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படலாம் என்று தமிழக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in