

இன்னும் 4 மாதங்களில் வரப்போகும் தேர்தலால் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றத்தை, அரசியல் கட்சியில் இருக்கக்கூடிய நான் எதிர்பார்ப்பதை விட, இங்கு இருக்கும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என ஸ்டாலின் பேசினார்.
கொளத்தூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற 'சமத்துவப் பொங்கல் விழா' நிகழ்ச்சிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
வரும் 14-ம் தேதி தமிழர் திருநாள், பொங்கல் திருநாள். ஆனால் தமிழ்நாட்டிற்கு நான் பொங்கல் திருநாள் வாழ்த்துச் சொல்வதற்கு முன்பாகவே, கொளத்தூர் தொகுதியில் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல வந்திருக்கிறேன்.
இந்தத் தொகுதியைச் சேர்ந்த நீங்கள், தொடர்ந்து 2-ஆவது முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினராக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, அந்தப் பொறுப்புக்களையும் நிறைவேற்றி, இந்தத் தொகுதி மக்கள் பிரச்சினைகளையும் என்னுடைய கவனத்தில் கொண்டு தொண்டாற்றுவதில், பணியாற்றுவதில், உங்களுக்குத் துணை நிற்பதில் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்னும் 4 மாதங்களில் வரப்போகும் தேர்தலால் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றத்தை, அரசியல் கட்சியில் இருக்கக்கூடிய நான் எதிர்பார்ப்பதை விட, இங்கு இருக்கும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
கரோனா காலத்தில், உலகத்தில் யாரும் செய்ய முடியாததை “ஒன்றிணைவோம் வா” என்ற திட்டத்தின் மூலமாக நாம் செய்து காட்டி இருக்கிறோம்.
கரோனா காலம், மிகக் கொடுமையான காலம். மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
எனவே, அரசாங்கம் உடனடியாக முன்வந்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளை, நிவாரண உதவிகளைச் செய்திட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் எடுத்துச் சொல்லி வந்தேன்.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், உடனடியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் வழங்கிட வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் வழங்கவில்லை.
ஏதோ பெயருக்காக 1000 ரூபாய் கொடுத்தார்கள். இப்பொழுது 10 மாதம் கழித்து, தேர்தல் வருகிற காரணத்தினால், திடீரென்று 2500 ரூபாய் அறிவித்திருக்கிறார்கள், கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அது தவறு என்று நான் சொல்லவில்லை. அதை நாங்கள் கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், நான் சொன்னது 5000 ரூபாய். கடந்த முறை கொடுத்த 1000 ரூபாயை விட்டுவிடுங்கள். அது கொடுத்து 10 மாதம் ஆகிவிட்டது.
இப்பொழுது 2500 ரூபாய் தருகிறார்கள். அதனுடன் இன்னும் 2500 கொடுத்து விடுங்கள் என்று தான் நான் சொல்கிறேன். அந்த 2500 ரூபாயை எப்படி வழங்க வேண்டும் என்றால், ரேஷன் கடைகளில் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஊழியர்கள் மூலமாகத் தான் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாக உத்தரவு போட்டிருக்கிறது.
ஆனால், அவர்கள் அதை அரசியல் லாபத்திற்காக, விரைவில் தேர்தல் வரும் காரணத்தினால், ஆங்காங்கே பேனர்கள் வைத்து, ஆளும் கட்சிக்காரர்கள் தங்களது சொந்தப் பணத்தைச் செலவு செய்வது போல நேரடியாகச் சென்று கொடுக்கிறார்கள்.
அதைக் கூட நாம் நீதிமன்றத்திற்குச் சென்று முறையிட்டோம். அதற்கு, பேனர்கள் வைக்கக்கூடாது, ஆளுங்கட்சியினர் இதில் தலையிடக் கூடாது, முறையாக ரேஷன் கடைகளில் வைத்து அதற்கென்று இருக்கும் ஊழியர்கள் மூலமாகத்தான் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களுக்குக் கொடுக்கும் அந்த நலத்திட்ட உதவிகளைக் கூட ஆளுங்கட்சியினர் அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடிய நிலையில் தான் இன்றைக்கு அவர்கள் இருக்கிறார்கள். இந்த உண்மைகளை எல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால், இது அரசியல் நோக்கத்தோடு நடத்துகிற விழா அல்ல; குடும்பப் பாச உணர்வோடு நாம் நடத்தும் விழா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.