

புதுச்சேரியில் முழுக்க முழுக்க தேர்தலுக்கான நாடகத்தை முதல்வர் நாராயணசாமி நடத்துகிறார் என, பாஜக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவரும், நியமன எம்எல்ஏவுமான சாமிநாதன் இன்று (ஜன.09) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தை ஆளும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆளும் அரசு சட்டம்-ஒழுங்கைக் காக்க வேண்டும். அரசியல் ஜனநாயகமும் அதுதான். ஆனால், போராட்டம் அறிவித்து ஒரு பதற்றமான சூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்கியதன் காரணமாக மத்திய அரசு துணை ராணுவத்தைப் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்துள்ளது. காங்கிரஸ் போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நகரம் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் செல்ல முடியவில்லை. மருந்து, மாத்திரைகள் வாங்க முடியவில்லை. அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையை நாங்கள் உருவாக்கக் கூடாது என்பதற்காகத்தான் அரசுக்கு எதிரான எங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளோம்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆளுநரை திமுக விமர்சித்து வந்தது. ஆனால், இந்தப் போராட்டத்தில் கூட்டணியில் உள்ள திமுக ஏன் பங்கேற்றவில்லை? காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் கூட பங்கேற்கவில்லை. எனவே, ஆளும் அரசு, கூட்டணிக் கட்சி மற்றும் தனது சட்டப்பேரவை உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதால் முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையைச் சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக புதுச்சேரி மாநில மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மீது மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நான்கரை ஆண்டுகளில் எதுவுமே செய்யாத அரசாக காங்கிரஸ் உள்ளது. மக்களைக் குழப்ப, தேவையற்ற போராட்டத்தை நாராயணசாமி நடத்துகிறார். இது ஆளுநருக்கு எதிரான போராட்டமல்ல. மக்களுக்கு எதிரான போராட்டம் என்றே பாஜக கருதுகிறது.
முழுக்க முழுக்கத் தேர்தலுக்கான நாடகத்தை முதல்வர் நாராயணசாமி நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் கட்சியாக திமுக உள்ளது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆகவே, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன், திமுக கூட்டணியில் உள்ளதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். மக்களைக் குழப்பக் கூடாது.
புதுச்சேரியில் பாஜக எழுச்சி அலை உருவாகியுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தலைமையில் நிச்சயம் ஆட்சி அமையும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு மத்திய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடத்தப்படும்".
இவ்வாறு சாமிநாதன் தெரிவித்தார்.