

அதிமுக பொதுக்குழு, செயற்குழுகூட்டம் சென்னை வானகரத்தில் நாளை நடைபெற உள்ளது. வழிகாட்டுதல் குழுவுக்கு அதிகாரம், கூட்டணியை இறுதிசெய்ய கட்சிஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் -இபிஎஸ்ஸுக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம், 6 மாதங்களுக்கு ஒருமுறை செயற்குழு கூட்டம் நடத்தி, இதுகுறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதிமுக 2019 டிசம்பரில் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களைநடத்தியது. அதன்பிறகு, 2020-ல்செயற்குழு கூட்டம் மட்டும்அதிமுக தலைமை அலுவலகத்தில்நடத்தப்பட்டது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை.
அதிமுகவில் 11 பேர் கொண்டவழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்ட நிலையில், பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதுதவிர, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸுக்கு முழுஅதிகாரம் வழங்கும் வகையில், பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போது கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று,முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை, ஓபிஎஸ் அறிவித்தபோது கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது.
இந்த சூழலில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 20-ம் தேதி நடைபெற்ற ஆலோசனையின்போது, ஜனவரி 9-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை வானகரத்தில் உள்ள வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் வரும் 9-ம் தேதி (நாளை) காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது.
இதற்கான அழைப்பிதழ் தனித்தனியாக அனுப்பிவைக்கப்பட் டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுகவில் 300-க்கும்மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். இதுதவிர சிறப்பு அழைப்பாளர்கள் 1,500-க்கும் மேற்பட்டவர்களும் வழக்கமாக வருவார்கள்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டு, அதற்கான சான்றிதழுடன், அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், முக்கியமாக 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கான அதிகாரம், ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாக கட்சி விதிகளில் திருத்தம் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை இறுதி செய்யவும்,அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.