கனமழையால் சங்கராபுரத்தில் 900 ஆடுகள் உயிரிழப்பு

பாவளம் கிராமத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஆடுகள்.
பாவளம் கிராமத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஆடுகள்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கனமழையின் காரணமாக 600 ஆடுகள் உயிரிழந்த நிலையில் 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் மற்றும் பாவளம் கிராமத்தைச் சேர்ந்த கருத்தப்பிள்ளை, பழனி மற்றும் அஞ்சலை ஆகியோர் கூட்டாக சேர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். ஆடுகளை மேய்ச்சலுக்காக அவ்வப்போது மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று வருவதுண்டு.

கடந்த சில தினங்களாக தொடர் மழை காரணமாக ஆடுகளை கொட்டகையில் அடைத்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில், இன்று (ஜன. 07) காலை முதல் மிதமாக மழை பெய்துவந்த நிலையில், மாலை கனமழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய பெய்த மழையால் கல்வராயன் மலை அடிவாரத்தில் பாப்பாத்தி மூளை ஓடை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சில நிமிடங்களில் தண்ணீர் வேகமாக சீறி பாய்ந்ததில் ஆட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஆடுகள் சத்தத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அவற்றைக் காப்பாற்ற அதன் உரிமையாளர்களால் இயலவில்லை. ஆடுகள் கண்ணெதிரே வெள்ளத்தில் அடித்துச் செல்வதையும், சில ஆடுகள் தடுப்பில் சிக்கி உயிரிழந்ததைக் கண்டும் கருத்தப்பிள்ளை, பழனி மற்றும் அஞ்சலை ஆகியோர் சோகமடைந்தனர்.

இதனால் தங்கள் வாழ்வாதாரமே இழந்துவிட்டதாகக் கதறி அழும் அதன் உரிமையாளர்கள், 600 ஆடுகள் உயிரிழந்திருப்பதாகவும், 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் எஸ்.வி.பாளையம், ஊராங்கனி கிராமங்களின் ஓடை வழியாக அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறினர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in