

அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலத் தலைமை அலுவலகம் முன் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் இன்று (ஜன.07) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாகப் பேசி முடிப்பதுடன், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வலியுறுத்தி வரும் பல்வேறு கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தொமுச மண்டலப் பொதுச் செயலாளர் பி.குணசேகரன் தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் நிர்வாகிகள் எம்.பழனிசாமி, எஸ்.அப்பாவு, சிஐடியு நிர்வாகிகள் எம்.கருணாநிதி, டி.சீனிவாசன், ஏஐடியுசிவைச் சேர்ந்த எம்.சுப்பிரமணியன், கே.நேருதுரை, ஐஎன்டியுசிவைச் சேர்ந்த கே.துரைராஜ், என்.குமாரவேல், ஹெச்எம்எஸ் நிர்வாகி செல்வம், டிடிஎஸ்எப் நிர்வாகி ஆர்.பெருமாள், ஏஏஎல்எல்எப் நிர்வாகிகள் மதியழகன், எம்.வையாபுரி, எம்எல்எப் நிர்வாகி ஜி.செல்வராஜ் உட்பட அந்தந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 100க்கும் அதிகமானோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறும்போது, "சென்னையில் இருந்து தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைமை அறிவிக்கும் வரை அல்லது பேச்சுவார்த்தை நடத்த அரசு தேதி அறிவிக்கும் வரை இரவு, பகலாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்றனர்.