

யார் தவறு செய்தாலும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அரசாக தமிழக அரசு விளங்குகிறது எனவும், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது எனவும் முதல்வர் பழனிசாமி ஈரோட்டில் பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக இன்று (ஜன். 07) முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
"எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்கள் நாட்டுக்காக, பிறந்து சேவை செய்தனர். அவர்கள் வழியில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் மீது குறைகூறும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் தினமும் பொய் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்த தேர்தல் மூலம் அவரை நிராகரித்து அதிமுக வெற்றிக்கொடி நாட்ட வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது அத்தனையும் பொய். இம்மியளவும் கூட உண்மை இல்லை. அவர்கள் ஆட்சியில் அமைச்சராக இருந்த 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதை மறைப்பதற்காக, வேண்டுமென்றே திட்டமிட்டு, ஆட்சி மீதும், அமைச்சர்கள் மீதும் வீண் பழி சுமத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்திற்கு செல்லும் போது பாதிப்பு ஏற்படும் என்பதற்காக, திட்டமிட்டு, அரசியல் சூழ்ச்சி செய்து, அரசியல் நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார்.
அதிமுக ஆலமரம் போன்றது. மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொடுக்கும் கட்சி அதிமுக. தமிழகத்தில் 2,000 மினி கிளினிக் தொடங்கி சாதனை தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. இத்திட்டத்தை நாடே போற்றுகிறது. ஆனால், ஸ்டாலின் மட்டும் குறை கண்டுபிடிக்கிறார். எதிர்கட்சித் தலைவர் எதைத்தொட்டாலும் சந்தேகப் பேர்வழியாக இருக்கிறார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 41 சதவீத மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் கடந்த ஆண்டு 6 இடங்கள் மட்டுமே மருத்துவக் கல்வி கிடைத்தது. நானும் கிராமத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்தவன் என்ற முறையில், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்க 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கினேன். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 313 பேர் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் 130 பேர் சேருவார்கள். இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 443 பேர் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான கல்விகட்டணத்தை அரசே ஏற்கிறது.
ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் 10-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படிக்க, ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி கல்வி உதவித்தொகை கொடுக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த உதவித்தொகையை வழங்குகிறோம்.
அதிமுக அரசைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பேணி காப்பதில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. யார் தவறு செய்தாலும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அரசாக எங்கள் அரசு விளங்குகிறது. திமுக ஆட்சியில் கட்சிக்காரர்கள் தவறு செய்தால் அவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள். சட்டத்திற்கு எதிராக நடப்பார்கள். அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது.
சிறுபான்மை மக்களாக இருந்தாலும் பெரும்பான்மை மக்களாக இருந்தாலும் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த அரசு பாதுகாப்பு வழக்கும். எந்த மாற்றமும் கிடையாது. சாதிச்சண்டை, மதச்சண்டை கிடையாது. அமைதிப்பூங்காவாக தமிழகம் விளங்குறது.
தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். மற்ற மதத்தினரோடு அண்ணன் - தம்பிகளாக பழகி வருகின்றனர்.
கரோனா பாதிப்பின்போது எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கைகளால், கரோனா பாதிப்பு குறைந்து வருகிறாது. கரோனா பாதிப்பு காலத்தில், 8 மாதம் விலையில்லா அரிசி 40 கிலோ, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, ரூ.1,000 ரொக்கம் கொடுத்தது தமிழக அரசு.
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது, தூணாக இருந்து மக்களைக் காக்கும் அரசாக உள்ளோம்.
தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ரூ.2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்காக போடப்படும் திட்டங்கள் இவை.
தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 7 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ளோருக்கு ரூ.80 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளோம். திமுக ஆட்சியில் வெறும் 8,000 கோடிதான் கொடுத்தார்கள். இதன்மூலம் அவர்கள் பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.
இதையெல்லாம் மறைத்து திட்டமிட்டு ஸ்டாலின் அவதூறு பேசுகிறார். எதையும் சிந்தித்து பேசக்கூடிய அளவுக்கு ஸ்டாலின் இல்லை.
பல்வேறு துறைகளில் விருது பெற்றுள்ளோம். உள்ளாட்சித்துறையில் நூற்றுக்கு மேற்பட்ட விருது, நீர் மேலாண்மையில் தேசிய விருது, கல்வியில் தேசிய விருது என பல விருதுகள் பெற்றுள்ளோம். தேசிய விருதுகள் பெறுவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. திமுக ஆட்சியில் ஒரு விருது கூட வாங்கவில்லை. தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில் மேட்டூர் முதல் காவிரி கடலில் சேரும் வரை எங்கு அசுத்த நீர் கலக்கிறதோ, அங்கெல்லாம் சுத்திகரித்து நீரை ஆற்றில் விடவுள்ளோம். பிரதமரைச் சந்தித்தபோது, இந்த திட்டத்தை நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் குடியரசு தின உரையின்போது இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழகத்தில் அதிமுக ஆட்சி வருவதற்கு முன்பு நூற்றுக்கு 32 பேர் உயர்கல்வி படித்த நிலை மாறி, இன்று நூற்றுக்கு 49 பேர் உயர்கல்வி படிக்கின்றனர். இந்தியாவில் உயர்கல்வியில் முதல்மாநிலம் விருது பெற்றுளோம்.
இதெல்லாம் ஸ்டாலினுக்குத் தெரியுமா? அவர் பேசுவது அனைத்தும் பொய். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் ஸ்டாலினுக்கு கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.
மக்களுக்காக சேவை செய்யும் இயக்கமாக, மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது. தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து தீய சக்தி திமுகவை ஒழிப்போம்".
இவ்வாறு முதல்வர் பேசினார்.