

வாழை மரங்களில் இருந்து நவீன முறையில் ஆடை தயாரித்தல், வாழையில் இருந்து நீர் எடுத்தல், தண்டில் இருந்து பிஸ்கட் தயாரித்தல் ஆகியவை ஐஐடி தொழில் நிறுவனம் மூலம் நிறைவேற்றப்படும், இதனால் வாழை விவசாயிகள் இரட்டிப்பு வருமானத்தை ஈட்டமுடியும் என முதல்வர் பேசினார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரில், வாரி மஹாலில் நடைபெற்ற வெற்றிலை கொடி விவசாயிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:
“வெற்றிலை விவசாயிகளின் கோரிக்கையான, வெற்றிலை ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் வெற்றிலையை என்னென்ன நோய் தாக்குகிறது, அதற்கு என்ன மருந்து அடிக்கலாம், அதை எவ்வாறு பாதுகாப்பது என்பதெல்லாம் ஆராய்ச்சி செய்ய உள்ளோம்.
வெற்றிலை விவசாயிகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் விவசாயம் செய்ய பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைய பணிகள் தொடங்கப்படவுள்ளது. வெற்றிலைக்கு பயிர்காப்பீடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளீர்கள். இது குறித்து அலுவலர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தந்த ஒரே அரசு தமிழ்நாடு அரசு தான். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9400 கோடி பயிர்காப்பீட்டுத்தொகை பெற்றுத்தந்துள்ளோம். இப்படி எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு அரசு துணை நிற்கும்.
மாவட்டத்தில் பூக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த பூக்களை இடைத்தரகர்கள் இல்லாமல், விற்பனை செய்வதற்காக ரூ.21 கோடி மதிப்பில் சர்வதேச பூ மார்க்கெட் உருவாக்கப்படவுள்ளது.
வாழை விவசாயிகள் இரட்டிப்பு வருமானத்தை ஈட்டும் வகையில், வெட்டப்படும் வாழை மரங்களில் இருந்து நவீன முறையில் ஆடை தயாரித்தல், வாழையில் இருந்து நீர் எடுத்தல், தண்டில் இருந்து பிஸ்கட் தயாரித்தல், மயில்சாமி அண்ணாதுரை என்னை சந்தித்து இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் எனச் சொன்னார்கள். சென்னை, ஐ.ஐ.டியில் ஒரு தொழில் நிறுவனம் இந்த தயாரிப்புகளை தயாரித்து வருகின்றது.
இந்த நிறுவனத்தின் தாயாரிப்புகளை தொடங்கும் போது வாழை விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். நான் ஒரு விவசாயி, விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவன். மேடையில் உள்ள அனைவரும் விவசாயம் செய்பவர்களே, இங்கு வந்திருப்பவர்களும் விவசாயம் செய்வர்களே. நீங்கள் எண்ணியவற்றை இந்த அரசு நிறைவேற்றும்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.