தற்போதைய 26.5% இடஒதுக்கீட்டில் அரசு கை வைத்தால் தேர்தலை நடத்தவிடமாட்டோம்: பிற்படுத்தப்பட்டோர் சமூக கூட்டமைப்பு எச்சரிக்கை

தற்போதைய 26.5% இடஒதுக்கீட்டில் அரசு கை வைத்தால் தேர்தலை நடத்தவிடமாட்டோம்: பிற்படுத்தப்பட்டோர் சமூக கூட்டமைப்பு எச்சரிக்கை
Updated on
1 min read

தற்போதைய 26.5% இடஒதுக்கீட்டில் அரசு கை வைத்தால் தேர்தலை நடத்தவிடமாட்டோம் என பிற்படுத்தப்பட்டோர் சமூக கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமூக கூட்டமைப்பு சார்பில், பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் தேவநாதன் யாதவ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீராம. சீனிவாசன், கொங்கு வேளாள கவுண்டர் சமூதாயம் சார்பில், ஈஸ்வரன், நாடார் சமுதாயத்தின் சார்பில் தனபாலன், உள்ளிட்ட சமுதாயத் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின், தேவநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த மாதம் தமிழக அரசு சாதி ரீதியாக கணக்கெடுப்பு எடுக்க, ஆணையம் அமைத்து முன்னாள் நீதிபதி குலசேகரன் என்பவரை நியமித்துள்ளது. சாதாரண ஒரு போராட்டத்திற்கு பயந்து, அரசு இந்த ஆணையத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் போராட்டத்தை நடத்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதை நாங்கள் ஏற்க முடியாது. அந்த ஆணையத் தலைவரை அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

அவரை நீக்கிவிட்டு வேறு சமூகத்தைச் சேர்ந்த உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமித்து, சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கவேண்டும்.

குறைந்தது ரூ 5 ஆயிரம் கோடி இன்றி சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க முடியாது. அது மிகப்பெரிய வேலை. இது ஒரு கண்துடைப்பாகவே பார்க்கிறோம்.

அப்படியே இருந்தாலும் குலசேகரனை நாங்கள் நம்ப முடியாது.

எம்ஜிஆர் காலத்தில் 50% பிற்பட்டோர் மக்களுக்கு இருந்தது. தற்போது குறைந்தது 40% இட ஒதுக்கீடாவது வேண்டும். தேர்தல் வரை மாவட்டம் தோறும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும்.

தேர்தலுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பிற்படுத்தப்பட்டோருக்கான 26.5 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளீர்களா என வெள்ளை அறிக்கையை நாங்கள் கேட்டுள்ளோம்.

தேர்தல் நேரத்தில் இப்பிரச்னை ஆரம்பித்துள்ளதால் நாங்களும் இப்பிரச்னையை முன்னெடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 26.5 ஒதுக்கீடு பறிபோகவிடாமல் தடுக்க, கட்சி வேறுபாடியின்றி பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினர் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளோம்.

ஏற்கெனவே இஸ்லாமியருக்கான தனி ஒதுக்கீட்டின் போது, பிற்படுத்தப்ட்டோருக்கான ஒதுக்கீட்டில் இருந்து எடுக்கப்பட்டது. இனிமேலும், 26.5 சதவீதத்தில் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது.

அப்படி எடுத்தால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த விடமாட்டோம். தற்போது நடக்கும் நாடகத்தால் 26.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கை வைக்கும் சூழல் உள்ளது.

இதில் கைவைக்கவிடமாட்டோம். 40 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என, வலியுறுத்துவோம். தேர்தலுக்குப் பின், இதைக்கேட்டு பெரிய போராட்டங்களை நடத்துவோம். சாதிப் பெயர்களை பெயர்களோடு இணைத்துக் கொள்ளும்போது, வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in