புதுச்சேரியில் 47 பேருக்கு கரோனா தொற்று; புதிதாக உயிரிழப்பு இல்லை: 5 லட்சத்தை நெருங்கிய பரிசோதனை எண்ணிக்கை

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப் படம்.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரியில் இன்று புதிதாக 47 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பரிசோதனை எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜன.5) தெரிவித்திருப்பதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் 3,827 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 24 பேருக்கும், காரைக்காலில் 7 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 15 பேருக்கும் என மொத்தம் 47 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 635 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை 38 ஆயிரத்து 300 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மருத்துவமனைகளில் 162 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 211 பேரும் என மொத்தம் 373 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 31 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 292 (97.37 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 4 லட்சத்து 98 ஆயிரத்து 724 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பரிசோதனை எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இவற்றில், 4 லட்சத்து 55 ஆயிரத்து 972 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in