தனிக்கட்சி தொடங்க பாஜக என்னை நிர்பந்திக்கவில்லை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திட்டவட்டம்

தனிக்கட்சி தொடங்க பாஜக என்னை நிர்பந்திக்கவில்லை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திட்டவட்டம்
Updated on
2 min read

தனிக்கட்சி தொடங்குமாறு பாஜக என்னை இயக்குவதாகக் கூறுவது தவறு என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திமுகவிலிருந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டார். இந்நிலையில், வரும் சட்டப்பரேவைத் தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க நேற்று முன்தினம் மதுரையில் ஆதரவாளர்களின் கூட்டத்தைக் கூட்டினார். தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய அழகிரி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். அந்த முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராக முடியாது என்று கடுமையாக விமர்சித்தார். அவரின் இந்த பேச்சு திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது செயல்பாடுகளுக்குப் பின்னணியில் பாஜக உள்ளதாக எழுந்துள்ள விமர்சனம் உள்ளிட்ட பல்வேறுகேள்விகளுக்கு பதில் அளித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருந்தது:

மதுரையில் நான் கூட்டிய கூட்டத்துக்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வந்திருந்தனர். மிகவும் மகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் இருந்தது. பல மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் நீங்கள் கட்சி தொடங்க வேண்டும் என்று கூறினர். இது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்கத் தயார் என்று தெரிவித்துள்ளனர். கால அவகாசம் கேட்டுள்ளேன். நிச்சயமாக ஒரு முடிவை அறிவிப்பேன். சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.

திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு கட்சியை தொடங்குமாறு பாஜக என்னை இயக்குவதாக கூறுவது தவறு. அது வதந்தி. திமுகவுக்காக உண்மையாக உழைத்தேன். எந்த பதவியும் தேவையில்லை என உழைத்தேன். இந்த உழைப்பு எல்லாம் வீணாகிவிட்டது. 7 ஆண்டுகளாக திமுகவில் இருந்து என்னை நீக்கி வைத்துள்ளனர்.

உண்மையான தொண்டனுக்காக நியாயம் கேட்டேன். அதனால்தான் ஒதுக்கப்பட்டேன். எந்த தவறும் செய்யாத நிலையில் நீக்கப்பட்டது எனக்கு மனவேதனையை அளித்தது. எப்படியாவது மீண்டும் கட்சியில் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன். கடைசி வரையில் அந்த முயற்சி எடுபடவில்லை. சரியாகவும் வரவில்லை. இதையடுத்து நாம் ஏதாவது செய்ய வேண்டும் என ஆதரவாளர்கள் பலரும் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தனர். அதன் பின்தான் ஆதரவாளர்கள் கூட்டத்தை மதுரையில் கூட்டினேன்.

மாவட்டச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் என நிர்வாகிகளை வைத்துத்தான் கட்சி நடத்தி திமுக பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. குக்கிராமங்களில் பேசிப்பேசித்தான் திமுக வளர்ந்தது.

பிரசாந்த் கிஷோரால் சாதகமில்லை

இன்று வடமாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோரை வைத்து திமுகவை நடத்துகின்றனர். இது திமுகவுக்கு சாதகமாக அமையாது என்றே நினைக்கிறேன்.

பிரசாந்த் கிஷோர் யார் என்றே தெரியாது. அவரை பார்த்ததுகூட இல்லை. கருணாநிதி உயிருடன் இருந்தபோது இப்படி நடந்ததா? தொண்டர்களை வைத்து கட்சி நடத்தினார். என் உயிருனும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என கருணாநிதி அழைத்தாலே வாக்களித்து விடுவார்கள். கருணாநிதி இருந்தபோது பல பேச்சாளர்களை கட்சியில் வைத்திருந்தார். இப்போது 3 பேச்சாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கும் வருமானம் இல்லாமல் போய்விட்டது. அந்த அளவுக்கு திமுக நிலைமை ஆகிவிட்டது.

இவ்வாறு மு.க.அழகிரி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in