மதுரை விமான நிலையத்தில்  7 மாதத்தில் ரூ.3.31 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: சிக்கிய 26 பயணிகளில் 12 பேர் பெண்கள்

மதுரை விமான நிலையத்தில்  7 மாதத்தில் ரூ.3.31 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: சிக்கிய 26 பயணிகளில் 12 பேர் பெண்கள்
Updated on
1 min read

மதுரை விமான நிலையத்தில் கடந்த 7 மாதத்தில் ரூ.3.31 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சுங்கத்துறையின் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஜெய்சன் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து மலேசியா, துபாய், சிங்கப்பூர் போன்ற பல்வேறு நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவை உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் போன்ற பொருட்கள் கடத்தலைத் தடுக்க, மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் ஒவ்வொரு விமானத்திலும், பயணிகளை தீவிரமாகக் கண்காணிக்கின்றனர்.

அவர்கள் கொண்டு செல்லும், வெளிநாடுகளில் இருந்து வாங்கி வரும் பொருட்கள் மற்றும் உடைமைகளை உன்னிப்பாகப் பரிசோதிக்கின்றனர். இதன் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இது போன்ற நடைமுறையில் தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டவிரோதமாக கடத்தப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இதன்படி, கடந்த 7 மாதங்களில் பயணிகளிடம் நடத்திய சோதனையின் அடிப்படையில், ரூ.3.31 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, மதுரை விமான நிலைய சுங்கத்துறையின் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஜெய்சன் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்ளிட்ட பிற தனியார் விமான நிறுவனங்கள் மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர், ராஸ்-அல்-கைமா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்களை இயக்கின.

நோயைப் பயன்படுத்தி நேர்மையற்ற கூறுகளால் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மதுரை விமான நிலைய சுங்க புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், மேற்கண்ட இடங்களிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சோதனைகளை தீவிரப்படுத்தினோம்.

ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 26 வழக்குகள் பதிவு செய்ததில் ரூ .3.31 கோடி மதிப்பிலான 6607. 290 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. இவ்வழக்குகளில் சிக்கிய 26 பேரில், 12 பயணிகள் பெண்கள். தங்கம் கடத்தல் தொடர்பாக 8 பேரை சுங்க விமான புலனாய்வு பிரிவு கைது செய்யப்பட்டுள்ளனர், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in