

பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பது எனக்குப் பெருமை அளிக்கிறது. திருவள்ளுவரின் மண்ணில் பொறுப்பேற்றது பெருமை அளிக்கிறது என்று சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி டிசம்பர் 31ஆம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜியை (Sanjib Banerjee) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார்.
அதன்படி தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கரோனா தடுப்பு விதிகள் காரணமாக தனிமனித இடைவெளியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் ஆளுநருமான சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அனைவரும் புதிய தலைமை நீதிபதி பானர்ஜிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் சுந்தரேசன், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ், லா அசோசியேஷன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
பின்னர் ஏற்புரை ஆற்றவந்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழில் வணக்கம் எனக் கூறி ஏற்புரையை தொடங்கினார்.
“திருவள்ளுவரின் மண்ணுக்கு வந்துள்ளது பெருமை அளிக்கிறது. நாட்டிலேயே ஒரு மொழியின் பெயரைக் கொண்டுள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். தொன்மையான மொழியாம் தமிழை இன்னும் கோடிக்கணக்கான பேர் செருக்கோடும், பெருமையோடும் பேசி வருகின்றனர்.
பாரம்பரியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்பது எனக்குப் பெருமை அளிக்கிறது. வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பின்றி நீதி பரிபாலனம் சாத்தியமில்லை.
இசை, பாரம்பரியம், நடனம், இலக்கியம், கலாச்சாரம் என அனைத்திலும் தனித்தன்மையோடு சிறந்து விளங்கும் தமிழகம், இனி என்னுடைய மாநிலம். இந்த மாநிலத்தில் நான் ஒரு சேவகன்” எனப் பெருமை பொங்கப் பேசிய தலைமை நீதிபதி, பின்னர் நன்றி என தமிழில் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வரவேற்புரையில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது சமூக அக்கறையும், குடிமக்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் பல தீர்ப்புகளை சஞ்ஜிப் பானர்ஜி வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார். அரசு மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், காளி பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகளில் பட்டாசு வெடிப்பதால் பலனில்லை என்றும், மாற்றாக மெழுகு தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.