Published : 02 Jan 2021 09:58 PM
Last Updated : 02 Jan 2021 09:58 PM

எஸ்.பி.வேலுமணி போட்ட திட்டம் நேற்றிரவே எங்களுக்குத் தெரியும்: ஸ்டாலின் பேச்சு

சென்னை

திமுக மக்களவை, உள்ளாட்சித் தேர்தலில் பெருவெற்றிப்பெறக் காரணமாக அமைந்தது கிராமசபைக் கூட்டங்களே. மக்கள் சபைக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து பொறுக்காமல் எஸ்.பி.வேலுமணி நேற்றே கூட்டத்தை சீர்குலைக்க திட்டம் போட்டது எங்களுக்குத் தெரியும் என ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோபி சட்டமன்றத் தொகுதி, கோபி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவலூர் ஊராட்சியில் நடைபெற்ற “மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்”திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

இது கிராம சபைக் கூட்டம். கிராம சபைக் கூட்டம் என்றால் எடப்பாடிக்குக் கோபம் வந்துவிடும். அதனால் மக்கள் கிராம சபைக் கூட்டம் என்று இதற்கு நாம் பெயர் வைத்திருக்கிறோம். முதலில் வைத்தது கிராம சபைக் கூட்டம் தான். கடந்த 23-ம் தேதி இந்த கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கினோம். இன்று காலையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்குச் சென்றேன்.

அது மிகவும் சிறப்புமிக்க தொகுதி. ஏனென்றால், அது ‘ஊழல் மணி’ தொகுதி. அங்கும் சென்றுவிட்டு தான் வந்தேன். அங்கு எப்படியாவது ஒரு கலவரத்தை நடத்தி, அந்தக் கூட்டத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்று முடிவு செய்து, வேலுமணி அவர்கள் ஒரு திட்டம் தீட்டினார்.

அந்தத் திட்டம் எங்களுக்கு நேற்று இரவே தெரிந்துவிட்டது. நாங்கள் எப்போதும் உஷாராக இருப்போம். அதன்படி இன்று காலையில் ஒரு சகோதரி, உதயசூரியன் தொப்பியைப் போட்டுக்கொண்டு, கூட்டத்தோடு கூட்டமாக வந்து, முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டார். கூட்டம் நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கூட்டத்தின் இடையில், திடீரென்று கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையில் அந்த பெண் கலவரத்தில் ஈடுபட்டார்.

ஏன் இந்த கிராம சபை கூட்டத்தை நடத்துகிறீர்கள்? என்ன காரணம்? என்று எல்லாம் வினவினார். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்தச் சகோதரி பேசுவதை நான் தெரிந்து கொண்டு, நீங்க: யார் - எங்கிருந்து வந்து இருக்கிறீர்கள் - எப்படி வந்தீர்கள் என்று எனக்குத் தெரியும் என்று சொன்னேன்.

எந்தக் கலவரத்தையும் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். மரியாதையாக வெளியே சென்று விடுங்கள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் என்ன நினைத்தார் என்றால் நாம் பிடித்து அடித்துவிடுவோம். அதில் ஏற்படுகிற இரத்தக் காயங்களைத் தொலைக்காட்சியில் காண்பித்து விடலாம். அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தார்.

நாமெல்லாம் அண்ணா வழியில் - கருணாநிதி வழியில் வந்திருக்க கூடியவர்கள். அதனால் அமைதியாக இருந்து கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நம்முடைய தோழர்கள், அந்த சகோதரியை காவல்துறையிடம் ஒப்படைத்து விட்டார்கள்.

காவல் துறையினரிடம் ஒப்படைத்த பிறகு, அவர்கள் வந்து விட்டார்கள். ஆனால் அந்தச் சகோதரி, என்னை அனைவரும் சேர்ந்து அடித்து விட்டார்கள் என்று ஒரு புகார் கொடுத்துவிட்டு வந்து விட்டார். நாம் சில நிமிடங்களுக்கு முன்னால் தான் புகார் கொடுத்து விட்டு வந்தோம்.

அந்தச் சகோதரி காவல் நிலையத்தின் வாசலில் வைத்து தொலைபேசியில் எஸ்.பி. வேலுமணியிடம் பேசுகிறார். அது எல்லாம் வீடியோவில் வந்துவிட்டது. அதுதான் இப்போது வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அந்த அம்மா பேசியது, மருத்துவமனையில் அனுமதி செய்யுங்கள் அப்படிச் செய்தால் தான் வழக்கு பதிவு செய்ய முடியும் என்று போலீஸ் பேசியது எல்லாம் வீடியோவில் வந்து விட்டது.

அந்த அம்மா அதிமுக மகளிரணி பொறுப்பில் இருக்கிறார்கள்.ஓராண்டுக்கு முன்னால் அதிமுகவில் இணைந்து இருக்கிறார். அந்த அம்மா வேலுமணிக்குப் பக்கத்து வீடு என்பதும், வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் புகைப்படத்துடன் தெளிவாக சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது.

எவ்வளவோ திட்டமிட்டு, முயற்சித்துப் பார்த்தார்கள். ஆனால் அந்த தடைகளை எல்லாம் மீறி, அந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திக் காட்டிய நம்முடைய கட்சித் தோழர்களுக்கு இந்த கிராம சபைக் கூட்டத்திலிருந்து நான் என்னுடைய நன்றியை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நானும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவன்தான். ஆனால் வேலுமணி இருந்த பொறுப்பில் நாம் இருந்திருக்கிறோமே என்று கவலைப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். ஆனால், ‘உள்ளாட்சியில் நல்லாட்சி’ வழங்கியவன் என்று பெயர் எடுத்தவன் நான் என்பதால் அந்த எண்ணம் மறைந்துவிடுகிறது.

கிராம சபைக் கூட்டங்களை உள்ளாட்சி அமைப்பு தான் நடத்த வேண்டும். ஆனால் ஆண்டுக்கு மூன்று முறை, காந்தி ஜெயந்தி, சுதந்திர நாள், குடியரசு நாள் ஆகிய இந்த மூன்று நாட்கள் நடைபெற வேண்டும் என்பது மரபு. ஆனால் இந்த ஆட்சியில் நடைபெறவில்லை.

அதனால் தான் நாம், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய 12600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து தமிழ்நாடு முழுவதும் நடத்தினோம்.

நான் ஒரு 60 ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தினேன். நான் மட்டுமல்ல, நம்முடைய கட்சியில் இருக்கக்கூடிய முன்னோடிகள், மாவட்டச் செயலாளர், துணைச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பேச்சாளர்கள் இப்படி எல்லோரும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று நடத்தினோம்.

அந்தக் கூட்டத்தில் என்ன குறை என்பது எல்லாம் கேட்டு, அதுமட்டுமில்லாமல் அவர்களிடத்தில் மனுக்களை வாங்கிக்கொண்டு, அதையெல்லாம் குறித்து வைத்துக்கொண்டு, அதை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சேகரித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடத்தில், தாசில்தாரிடத்தில், அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம்.

அதன்பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி நமக்குக் கிடைத்தது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 39 தொகுதிகளில் ஒன்றே ஒன்றுதான் தவறிவிட்டது. 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் நம்முடைய அணி மாபெரும் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் நாம் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு இந்த ஊராட்சி சபைக் கூட்டம் தான் மிக அதிக அளவுக்கு பயன்பட்டது. மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

அடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதற்கு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து முறையாக நடத்த வேண்டும் என்று சொன்னோம். இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரைக்கும் போனது உங்களுக்கு தெரியும்.

அந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி எவ்வளவோ முறைகேடுகளை எல்லாம் செய்தார்கள். அதை எல்லாம் தாண்டி 75 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம் என்று சொன்னால், அதற்குக் காரணம் நம்மீது இருக்கும் நம்பிக்கை. தேர்தல் நியாயமாக நடந்து இருந்தால் கிட்டத்தட்ட 90% இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்.

எதற்காகச் சொல்கிறேன் என்றால், இன்றைக்கும் இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறோம். இந்த கிராம சபைக் கூட்டத்தில் இருக்கக்கூடிய உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, நீங்கள் ஒன்றை நினைத்துப்பாருங்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மையார் ஜெயலலிதாவிற்குப் பிறகு எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் மறைந்து விட்டார்கள்.

அவர்கள் என்னதான் ஆட்சி சிறப்பாக நடத்திடவில்லை என்றாலும் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. அவருடைய மறைவு இன்றைக்கும் நம்மால் மறக்க முடியவில்லை. அவர் மறைவில் உள்ள மர்மத்தை விசாரணையை நடத்த வேண்டும் என்று இன்றைக்கும் நான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

மார்ச் மாதத்தில் தேர்தல் தேதியை அறிவிப்பார்கள். ஏப்ரல் மாதத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும். மே மாதத்தில் உங்களுடைய அன்போடு ஆதரவோடு திமுக ஆட்சி அமையப் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால் அதற்கு முன்பு உங்களிடத்தில் விழிப்புணர்வு, ஏற்கனவே பெற்றிருக்கும் விழிப்புணர்வோடு மேலும் பல செய்திகளை, பல உண்மைகளை, அறிந்து கொள்ள வேண்டும், அதே நேரத்தில் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை நாங்களும் தெரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை நாடி வருகிறோம். அதேபோல நீங்களும் எங்களை நாடி வந்திருக்கிறீர்கள்.

ஒரு அதிமுக பெண் தனியாக ஒரு கலவரத்தைச் செய்து விட்டுச் சென்றுவிட்டார். அதை நினைத்துப் பார்க்கிறேன். இவ்வளவு பெண்கள், சகோதரிகள் உட்கார்ந்திருக்கிறார்கள். கட்டுப்பாடாக உட்கார்ந்திருக்கிறார்கள்.

இது தான் திமுக நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். இப்போது மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் உங்களிடத்தில் என்னென்ன கோரிக்கைகள் இருக்கப் போகிறது என்பதைக் கேட்கப்போகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x